காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர்

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் சிலரை வேண்டா வெறுப்பாகவே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர் பதவிக்கு அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்ட சிலரை நியமிப்பதில், சிறிலங்கா அதிபருக்கு உடன்பாடு இருக்கவில்லை.

19ஆவது திருத்தச்சட்டத்தினால் சிறிலங்கா அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு விட்டதால், அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்டவர்களை நியமிப்பதை விட அவருக்கு வேறு வழி இல்லை.

அரசியலமைப்பு சபையின் பரிந்துரைக்கு அமைய, காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர் நியமனத்தை இரண்டு வாரங்கள் மாத்திரமே அவரால் தள்ளிப் போட முடிந்தது.

தனது நிலைப்பாட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் தெளிவுபடுத்தியுள்ளார்” என்றும் அவர் கூறினார்.

எனினும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்களாக நியமிக்க விரும்பாதவர்களின் பெயர்களை அமைச்சர் மகிந்த சமரசிங்க வெளியிட மறுத்து விட்டார்.

-puthinappalakai.net

TAGS: