மகாதிர் பயன்படுத்தவிருந்த ஜெட் விமானத்தின் டயர்களில் கோளாறு, சதி வேலையா?

 

மகாதிர் பயன்படுத்தவிருந்த தனியார் ஜெட் விமானத்தில் நாசவேலை நடந்திருக்கலாம் என்று அவர் கூறிக்கொண்டார்.

மகாதிரும் அவரது துணைவியார் சித்தி ஹாஸ்மாவும் பெட்டாலிங் ஜெயா சுபாங் விமானநிலையத்திலிருந்து லங்காவிக்குச் செல்லவிருந்தனர். ஆனால் அவர் பயன்படுத்தவிருந்த ஜெட் விமானத்தின் டயர்களில் ஏதோ பிரச்சனைகள் இருப்பதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது என்று மகாதிர் கூறினார்.

இது முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது நல்லதாகி விட்டது. இல்லையென்றால் விமானம் கிளம்பி பின்னர் நொருங்கியிருக்கும் என்று லங்காவி வந்தடைந்த பின்னர் அங்குள்ள பேரோன் ரிசோர்ட்டில் சீன மற்றும் இந்தியச் சமூகங்களுடன் நடந்த ஒரு தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பேசுகையில் மகாதிர் கூறினார்.

இந்த லங்காவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தாம் வேறொரு ஜெட் விமானத்தைப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

இதில் நாசவேலை இருக்கலாம் என்ற சாத்தியத்தை அவர் நிராகரிக்கவில்லை.

இது யாரோ ஒருவரால் திட்டமிடப்பட்டது என்று நினைப்பதாக கூறிய மகாதிர், தாம் ஆயிரம் தடவைகளுக்கு மேல் இதைச் செய்திருப்பதாகவும், இம்மாதிரியான சம்பவம் நடந்தது இதுதான் முதல் தடவை என்று அவர் மேலும் கூறினார்.