கூட்டமைப்பு தலைமை கண்ணாடியில் தம்மைப் பார்க்க வேண்டும் – என்கிறார் முதலமைச்சர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை போதிய செயற்திறனின்றி இருப்பதாகவும், அவர்கள் கண்ணாடியில் தம்மைப் பார்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயெ அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனான உங்களின் உறவுகள் மோசமடைந்து வருகின்றன. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமது முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்று அவர்கள் அண்மையில் அறிவித்த பின்னர் அது இன்னமும் மோசமடைந்துள்ளது. இந்தப் பிளவுக்கு காரணம் என்ன? என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தலைமைத்துவத்தின் அரசியல் செயற்திறன் போதுமானதல்ல என்று மட்டுமே நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அண்மைய தேர்தல் முடிவுகள் எனது அச்சத்தை நியாயப்படுத்தியுள்ளது.

தலைமைத்துவம் கண்ணாடி முன் தம்மை பார்க்க வேண்டும். அதன் பின்னர், நான் கூறியது சரியா, தவறா என்று முடிவு செய்ய முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைத்துவம் செயற்திறனுடன் இயங்காவிடின், அது நிச்சயமாக தமிழ் சமூகத்தின் நலன்களை பாதிக்கும். இலங்கைத் தமிழர்கள்  தமது தனித்துவத்தை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.

-puthinappalakai.net

TAGS: