அரசியல் தீர்வு காணப்படாத நிலையில், 20வது திருத்தத்தை த.தே.கூ ஆதரிக்காது: எம்.ஏ.சுமந்திரன்

புதிய அரசியலமைப்பு ஊடாக அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்கு முன், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் வகையில் கொண்டுவரப்படும் 20வது திருத்தச் சட்டத்தை அதன் தற்போதைய வடிவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்காது என்று தெரிகின்றது.

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை மேற்கொள்காட்டி கொழும்பு ஊடகமொன்றே மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு ஊடகத்திடம் சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது, “நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்கிற கட்சியின் கொள்கையில் மாற்றம் இல்லை என்ற போதும் அரசியல் தீர்வு, தேர்தல் முறைமை மாற்றம் என்பவற்றை விட்டுவிட்டு ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை மட்டும் ஒழிப்பதை ஏற்க முடியாது.

அரசியல் தீர்வு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, தேர்தல் முறைமை ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் அரசியலமைப்புப் பேரவை ஏற்கனவே ஆராய்ந்தது. இதில் ஒன்றை மாத்திரம் எடுத்துச் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முக்கியமான பிரச்சினைகளுக்குச் சேர்த்தே தீர்வு காண வேண்டும். அதற்காக நாங்கள் இதனை எதிர்க்கின்றோம் என்று சொல்ல முடியாது.” என்றுள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக 20வது திருத்தச் சட்டவரைபு ஒன்று பாராளுமன்றத்திற்குக் கொண்டு வரப்படவுள்ளமை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியபோது அதற்குப் பதிலளித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“20ஆவது திருத்தச் சட்டவரைபில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பைப் பற்றி மாத்திரம்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 2014ஆம் ஆண்டு மாநாட்டிலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. எமது அந்தக் கொள்கை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

1978ஆம் ஆண்டுதான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகப் பெரிய பிரச்சினையான இனப்பிரச்சினை 1948ஆம் ஆண்டிலிருந்தே தொடர்கின்றது. இனப்பிரச்சினையால்தான் பல லட்சம் பேர் உயிரிழந்தனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையால் யாரும் உயிரிழக்கவில்லை. அதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. அதை ஆதரிப்போம் என்று சொன்னாலும் அதைத் தனித்துச் செய்வது சரியானதல்ல.

அரசியலமைப்புப் பேரவையில்கூட நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமை ஒழிப்புக் குறித்துப் பேசப்பட்டது. அரசியல் தீர்வு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், தேர்தல் முறைமை ஆகிய மூன்றும் ஒரேயடியாக நடைபெற்றாக வேண்டும். இதில் ஒன்றை மாத்திரம் எடுத்துச் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முக்கியமான பிரச்சினைகளுக்குச் சேர்த்தே தீர்வு கண்டாக வேண்டும்”என்றுள்ளார்.

-http://4tamilmedia.com

TAGS: