சிறிலங்கா விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை சாடுகிறார் நவிபிள்ளை

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை, அந்த நாட்டின் முன்னாள் நீதிபதியும், முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருமான நவநீதம்பிள்ளை அம்மையார் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஹேக் நகரில், நடைபெற்ற சட்டவாளர் சங்கத்தின் போர்க்குற்ற விவகாரக் குழுவின் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள நவநீதம்பிள்ளையிடம், ஊடகம் ஒன்று எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் தென்னாபிரிக்கா மற்றும் அனைத்துலக சமூகத்தின் அணுகுமுறைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

“கூட்டு செயற்பாட்டை காணவில்லை. தனிப்பட்ட நலன்கள், பிராந்திய நலன்கள், கூட்டு செயற்பாட்டுக்குத் தடையாக உள்ளது.

பல்வேறு வடிவங்களில் நாடுகள் இப்போது தமக்கிடையில் சிறு சிறு அமைப்புகளை உருவாக்குகின்றன. அவர்கள் தமது நலன்களைத் தான் முக்கியமாக பார்க்கிறார்கள்.

சில வேளைகளில் பயங்கரமான மீறல்களில் ஈடுபட்டிருந்தாலும், தமது குழுக்களில் உள்ள நண்பர்களுக்காக, தீர்மானங்களை எதிர்த்து வாக்களிக்கிறார்கள்.

ஜனநாயக தென்னாபிரிக்கா அதனைச் செய்து எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  உள்நாட்டு விவகாரம் என்பதால், சிறிலங்கா மோதல்கள் குறித்து விசாரணை நடத்தப்படக் கூடாது என்று தென்னாபிரிக்கா கூறியிருந்தது.

நிறவெறியை ஒரு உள்நாட்டு விவகாரமாக அனைத்துலக சமூகம் கருதியிருந்தால், அதனை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

அப்படியாயின், நாங்கள் இன்னமும் நிறவெறித் துன்பங்களையே இன்னமும் அனுபவித்துக் கொண்டிருந்திருப்போம்.” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

-puthinappalakai

TAGS: