“இலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி அரசியல் பேதங்களுக்கு அப்பால், தேசியப் பிரச்சினைக்கு அடிப்படையாக அமைந்துள்ள காரணங்களுக்குத் தீர்வு காண்பதற்காக அணிதிரளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் மே தினத்திலே நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன்.” என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உலக வரலாற்றிலே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினம் பற்றி நாம் நினைவுகூர்கின்ற வேளையில், இந்நாட்டு மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் ஒன்றினை பெற்றுக் கொடுப்பதற்காக தமது உச்ச பங்களிப்பினை வழங்கும் எமது நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
நிரந்தர சமாதானம் மற்றும் பொருளாதார மேம்பாடு என்பவற்றின் உச்ச பயனை அடைந்துகொள்வதற்கு நாட்டு மக்கள் அனைவரையும் சமமாகவும், அபிமானத்துடனும், சுய கௌரவத்துடனும் மதிக்கக் கூடிய நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்புச் சட்டமொன்றை உருவாக்க வேண்டிய கட்டாய தேவையுள்ளது. எமது தாய் நாட்டிற்கு இம்மகத்தான தேவையினை நிறைவேற்றிக்கொள்வதற்குக் காணப்பட்ட பல்வேறு வாய்ப்புக்கள் கடந்த கால வரலாற்றிலே எம்மை விட்டு கை நழுவிச் சென்றுள்ளமையால், அவ்வாறானதொரு மற்றுமொரு வாய்ப்பினை நாம் இழந்துவிட முடியாது.
இந்நாட்டின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி அரசியல் பேதங்களுக்கு அப்பால், தேசியப் பிரச்சினைக்கு அடிப்படையாக அமைந்துள்ள காரணங்களுக்குத் தீர்வு காண்பதற்காக அணிதிரளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் மே தினத்திலே நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன்”என்றுள்ளார்.
-http://4tamilmedia.com