முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் கட்சிகளின் சார்பில் உரையாற்றுவதற்கு இரண்டு நிமிட நேரங்களே ஒதுக்கப்படுமென யாழ். மறைமாவட்ட நீதி, சமாதான ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, யாழ். கொழும்புத்துறை குருமடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது விளக்கமளிக்கப்பட்டது.
அங்கு, யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினர் கூறியதாவது;
“முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதினத்தில் அரசியல் கட்சிகளின் கட்சிசார் அரசியலுக்கு இடமளில்லை என்பதுடன், சுயலாப அரசியலையும், தனிப்பட்ட கட்சிகளை விமர்சிப்பதற்கும் அனுமதிக்க முடியாதென்பதுடன், அரசியல்வாதிகளின் உரைகள் 2 நிமிடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்தும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடத்தப்படுமென்றும், தனிப்பட்ட வகையில், தனிக்கட்சிகள் தனியான இடங்களில் நடத்தாது. பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவுகூர முன்வர வேண்டும்.
அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கும், மாற்றுக்கட்சிகளை நோக்கி முன்வைக்கும் கருத்துக்களுக்கும் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வில் இடமில்லை. பொது மக்களின் வேதனைகள் நியாயப்படுத்தப்பட வேண்டும். பொது மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அங்கு உயிரிழந்தவர்கள் எமது மக்கள். அஞ்சலி எமது மக்களின் வேதனைகளின் வெளிப்பாடு அவற்றை வெளிப்படுத்த மிகவும் சிறப்பான முறையில் ஒருங்கமைக்கப்பட்டு, எமது மக்களின் நினைவுகள் நினைவுகூரப்பட வேண்டுமென்பதுடன், அஞ்சலிகளும் செலுத்தப்பட வேண்டும். தனிக்கட்சிகள் தமது அரசியலை நடத்துவதற்கு, முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வுகளில் இடமளிக்கப்படாது.” என்றுள்ளார்.
-4tamilmedia.com