காணாமல் போனோருக்கான பணியகம், மன்னாரில் நேற்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முதலாவது கலந்துரையாடலை நடத்தியது.
இந்தக் கலந்துரையாடலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் வரையில் பங்கேற்றதாகவும், இது வெற்றிகரமானதாக அமைந்தது என்றும், பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் பங்கேற்றனர்.
அவர்களுடன் நாம் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டோம். செயல்முறைகள் தொடர்பாக உறவினர்கள் பல் கவலைகளை எழுப்பினர்.
பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் மனச்சோர்வும் விரக்தியும் அடைந்துள்ளனர். ஆனாலும் அவர்கள் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
காணாமல் போனோர் பணியகம், அதன் செயல்பாடுகளின் ஊடாக, மக்களின் நம்பிக்கையைப் பெறும் என்று நம்புகிறது.என்று குறிப்பிட்டார்.
முன்னதாக இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய பணியகத்தின் ஆணையாளர்களில் ஒருவரான நிமல்கா பெர்னான்டோ, காணாமல் போனோரின் குடும்பங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பணியகத்தின் மீது குடும்ப உறுப்பினர்கள் நம்பிக்கை வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
எனினும், கலந்துரையாடலில் பங்குபற்றிய உறவினர்கள், காணாமல் போயுள்ள தமது குடும்ப உறுப்பினர்களை நீண்டகாலமாகத் தேடியும் எந்தப் பதிலும் கிடைக்காத நிலையில், பணியகம் மீது நம்பிக்கை வைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து கரிசனை வெளியிட்டனர்.
அத்துடன் அனைத்துலக பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றே தாம் கோரியதாகவும் சிலர் கருத்து வெளியிட்டிருந்தனர்.
-puthinappalakai.net