இறுதி கட்ட யுத்தத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கில் உயிரிழந்தவர்கள் யார். எமது தேசத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகளும் உறவினர்களும் அல்லவா. அவர்களை நினைவு கூருவதில் என்ன தவறு காணப்படுகிறது என சுகாதார அமைச்சரும் , அமைச்சரவை இணை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு கொழும்பு நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் , பங்கேற்றிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மே 18ம் திகதியினை தேசிய இனவழிப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கு வட மாகாண சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
ஆனால் , இலங்கையை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்ட தினமாக நாம் கொண்டாடுகின்றோம் இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
மக்கள் விடுதலை முன்னணியினர் அன்று ஆயுதம் ஏந்திய தரப்பினரே. ஆனால் அவர்கள் இன்று உயிரிழந்தவர்களை நினைவு கூரவில்லையா? ஜேவிபினருக்கு இந்த நாட்டில் அதற்கான அனுமதி காணப்படுமாகவிருந்தால் ஏன் தமிழ் மக்களுக்கு அவர்களின் உறவுகளை நினைவு கூர அனுமதி மறுக்கப்படுகிறது.
நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன் . உண்மையில் உங்களிடம் தற்பொது எழுந்துள்ள பிரச்சினை நினைவு கூரல் என்பது தொடர்பிலா அல்லது தமிழ் மக்கள் அதனை செய்கின்றனர் என்று பொறுத்துக்கொள்ள முடியாத மனப்பாங்கிளா? இந்த கேள்வியினை கேட்கின்றீர்கள்.
இவ்வாறு பதிலளித்துக்கொண்டிருந்த அமைச்சரின் கருத்துக்களை புறக்கணித்த செய்தியாளர் ஒருவர் , இறுதிக்கட்ட யுத்தத்தில் தீவிரவாதிகளே உயிரிழந்தனர் . பொதுமக்கள் உயிரிழக்கவில்லையே என வினவியதற்கு ,
சர்வதேசம் தன்னிடம் ஒரு கேளிக்கையான கேள்வியொன்றினை முன்வைத்திருந்தது . உங்களைப் போன்ற நபர்கள் இவ்வாறு கேள்வி எழுப்புவதனாலேயே அந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.
அந்த கேள்வி என்ன தெரியுமா? சபையில் எவரேனும் அதனை பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?
இலங்கை பிரதிநிதிகளே…! ஒரு பொது உயிரேனும் இழக்கப்படாமலா இலங்கை யுத்த வெற்றியை பெற்றது.
இந்த கேள்விக்கு சிரிப்பதா அல்லது பதிலளிப்பதா நீங்களே கூறுங்கள் என சுட்டிக்காட்டிய அமைச்சரிடம் பிரிதொரு கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
அப்படியென்றால் , இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சாதாரண பொதுமக்களும் கொல்லப்பட்டனர் என்பதனை அரசாங்க தரப்பு பிரதிநிதி என்ற வகையில் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா..?
கடும் சினத்துடன் , ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த இணை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன ஏன் உங்களுக்கு தெரியாதா? அல்லது எனக்குதான் தெரியாதா? அனைவரும் அறித்த உண்மையை மீண்டும் கேள்வியாக எழுப்ப வேண்டாம்.
மனிதாபிமானத்துடன் செயற்பட முயற்சி செய்யுங்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
இதன்போது , அமைச்சருடன் முரண்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அது தொடர்பில் சர்ச்சைகளை கொடுத்தனர்.
சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட அமைப்பே தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பாகும் ஆனால் ஜேவிபியினர் அவ்வாறு இல்லை .
சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பினரை நினைவு கூர எவ்வாறு அனுமதிக்க முடியும்.
இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா என கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
மீண்டும் , சொற்போருக்கு தயாரான ராஜித்த சேனாரத்ன செய்தியாளர்கள் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். வடக்கு மக்களின் ஈழ கோரிக்கைக்கு ஆதரவாகவே தாம் ஆயுத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்திருந்தனர்.
விடுதலைப்புலிகள் ஈழ வி்டுதலைக்காக நேரடியாக ஆயுதமேந்தினர் இருவரின் நோக்கும் ஒரே இலக்கினை கொண்டுள்ளது என்பதினை புரிந்து கொள்ள வேண்டும்.
1971ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினர் ஆயுதமேந்தி எமது நாட்டிலுள்ள மக்களையே துண்டாடினர். அதேபோன்று விடுதலைப்புலிகள் இயக்கமும் நாசகர வேலைகளை முன்னெடுத்திருந்தது.
ஆகையினால், நாங்கள் விடுதலை புலிகளுக்கு எதிராக மாத்திரமே யுத்தம் புரிந்தோம் . மாறாக பொதுமக்களுக்கு எதிராக அல்ல.
ஆனால், இந்த யுத்தத்தில் பொதுமக்களும கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் பிறநாட்டவர்கள் அல்ல எமது தேசத்தை சேர்ந்தவர்கள் என்பதனை உணருங்கள்.
யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்களை நினைவுகூர அவரவர் குடும்பத்தினருக்கு உரிமைகள் காணப்படுகின்றன.
இதனை எவராலும் நிராகரிக்க முடியாது என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டியிருந்தார்.
-tamilcnn.lk