முள்ளிவாய்க்கால் சென்று வீடு திரும்பும் மக்களை இடைமறிக்கும் இராணுவம்! காரணம் இதுதானாம்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் ஸ்ரீ லங்கா இராணுவத்தினர் கொட்டகை அமைத்து குளிர்பானங்கள் மக்களுக்கு வழங்கிவருவதாக தகவல் கிடைத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில் தற்பொழுது அங்கு மழை பொழிந்தவண்ணம் உள்ளது. நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அண்மையில் வீதியோரமாக கொட்டகை அமைத்துள்ள படையினர், அவ்வழியால் வரும் மக்களை இடைமறித்து குளிர்பானங்கள் வழங்கிவருகின்றனர்.

எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள்? யுத்த வெற்றியை இன்றையதினம் இங்கு கொண்டாடுகிறீர்களா? என்று சம்மந்தப்பட்ட படையினரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த படையினர், “இன்றைய தினம் முல்லைத்தீவில் துக்கதினம் கடைப்பிடிக்கப்படுவதால் கடைகள் அனைத்தும் பூட்டியுள்ளன. நினைவேந்தலை கடைப்பிடிக்கும் மக்களுக்கு எமது ஆதரவை வழங்குகின்றோம். நிகழ்வுகளுக்காக பல்வேறு இடங்களிலிருந்தும் வந்துள்ளனர். அவர்களுக்கு செய்யப்படும் சிறிய உதவியாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றோம். மற்றும்படி இதனை ஒரு யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வாக ஒருபோதும் ஏற்பாடு செய்யவில்லை. நாம் என்றும் விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே எதிரானவர்களேயென்றி மக்களுக்கு எதிராளிகள் இல்லை. இறந்துபோன மக்களின் உணர்வினை மதித்து இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்” என்றனர்.

குறித்த பகுதியில் பேருந்துகளில் வந்த மக்களை நடு வீதியில் நின்று மறிக்கும் படையினர் தமது குளிர்பானங்களை மக்களுக்கு வழங்குவதாகவும் இதனை சில மக்கள் தாகத்தினால் பெற்று பருகுவதாகவும் பலர் அதனை புறக்கணிப்பதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயினும் வெளிப்படையாக இதனை ஒரு யுத்த வெற்றிக் கொண்டாட்டம் இல்லை என படையினர் தெரிவித்தபோதும் ஏதாவது உள் நோக்கம் இருக்கலாம் என அங்கிருப்பவர்கள் விசனம் வெளியிட்டுள்ளமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

-athirvu.in

TAGS: