நினைவேந்தல் நிகழ்வொன்றுக்கும், எழுச்சி நிகழ்வொன்றுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசம் உணரப்படாமல், ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்’ பிரதான நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் தினம் உள்ளிட்டவற்றை முன்வைத்து புலம்பெயர் தேசங்களில்தான் இதுவரை காலமும் ‘நான் நீ’ என்கிற அடிதடி மோதல்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன.
கடந்த ஆண்டு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சிலரால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களை அடுத்து, இம்முறை அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு, நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்கப் போவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்தது.
ஆனால், கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமான குழப்பங்களையும் ஒழுங்கின்மையையும் நினைவேந்தல் நிகழ்வு பதிவு செய்திருக்கின்றது. பிரதான நிகழ்வுக்கும் நினைவேந்தலில் பங்கெடுத்த மக்களுக்கும் இடையில், இனம்புரியாத வகையில் இடைவெளியொன்று காணப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வொன்று, பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆற்றுப்படுத்தலைச் செய்வதையே பிரதானமாகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைப் ‘பொங்கு தமிழ்’, ‘எழுக தமிழ்’ எழுச்சி நிகழ்வுகளுக்கு ஒப்பான ஒன்றாகப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கற்பிதம் செய்து கொண்டமையே குழப்பங்களுக்கான அடிப்படைக் காரணமாகும்.
பிரதான நிகழ்வை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்வதிலும், மோட்டர் சைக்கிள் பேரணி செல்வதிலும் காட்டிய அக்கறையை, மாணவர் ஒன்றியம், அஞ்சலி நிகழ்வை முறையாக ஒழுங்கமைப்பதிலும் காட்டியிருக்க வேண்டும்.
நினைவேந்தல் நிகழ்வில், ‘பொதுச் சுடர்’ எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேயளவுக்கு ‘அகவணக்கமும்’ முக்கிமானது. அதுதான், கூடியிருக்கும் மக்களை ஒருமுகப்படுத்துவது.
பொதுச் சுடர் ஏற்றப்படும் பகுதியை, ஒருவகையிலான ஆடாவடித்தனத்தின் மூலம், மாணவர் ஒன்றியத்தினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டதன் மூலம், மக்களுக்கும் பிரதான நிகழ்வுக்கும் இடையிலான இடைவெளி ஆரம்பத்திலேயே தோற்றுவிக்கப்பட்டது.
அகவணக்கத்துக்கான தருணம் மறக்கப்பட்டு, தங்களை முன்னிலைப்படுத்தும் எண்ணம் மாணவர்களிடம் தோன்றிய போதே, மக்கள் அநாதையாக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த போதும், ஒவ்வொருவரையும் தனித் தனித் தீவுகளாக உணர வைத்தல் என்பது கொடுமையானது.
முள்ளிவாய்க்காலில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன், உயிர் பிடித்து ஓடிக்களைத்து, நம்பிக்கைகள் எல்லாமும் பொய்த்துப்போன தருணத்தில் மக்கள் என்ன மனநிலையில் இருந்தார்களோ, அந்த மனநிலையை மீளவும், அந்த மக்களிடம் சேர்ப்பிக்கும் தருணம் என்பது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
அதன் ஒரு வடிவத்தை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை பதிவு செய்திருக்கின்றது என்பதுதான், எழுந்திருக்கும் விமர்சனங்களுக்கு முக்கிய காரணம்.
அதுவும், கடந்த முறை ஏற்பட்ட குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக முன்வந்திருப்பதாகக் காட்டிக் கொண்ட மாணவர் ஒன்றியத்தினர், மக்களின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், கோட்டை விட்டதென்பது, நம்பிக்கையீனங்களைக் தோற்றுவித்திருக்கின்றது.
தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், பல்கலைக்கழக மாணவர்கள் முக்கிய பங்காற்றியிருக்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல், ஒட்டுமொத்தமாகத் தேர்தல் என்கிற ஒற்றை வழியில் பயணிக்க ஆரம்பித்திருக்கின்ற நிலையில், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள், நிலைப்பாடுகள் சார்ந்து, நம்பிக்கையான பொதுத் தரப்பாகப் பல்கலைக்கழக மாணவர்கள் இருக்க வேண்டும். பொறுப்புணர்வும், செயற்பாட்டுத் திறனும் சார்ந்த தரப்பாக பல்கலைக்கழக மாணவர்களும் பல்கலைக்கழக சமூகமும் முன்நிற்க வேண்டும்.
ஆனால், கடந்த சில காலமாக நிகழ்ந்து வருவது என்னவோ, எந்தவித தார்ப்பரியமும் அறியாத சிறுபிள்ளைத்தனங்களே. கிடைத்திருக்கின்ற ஜனநாயக வெளியை உருப்படியாகப் பயன்படுத்தல் மற்றும் தக்க வைத்தல் என்பது அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்ற மாணவர்களால் செய்யப்பட வேண்டியது.
2015ஆம் ஆண்டிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை வடக்கு மாகாண சபை முன்னெடுத்து வந்தது. ஆனால், நினைவேந்தலை ஒழுங்குபடுத்துதல் சார்ந்து, பொதுக்கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை ,பல தரப்பினரிடமிருந்தும் எழுந்தமைக்குப் பல காரணங்கள் உண்டு.
குறிப்பாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது, வடக்குக்குள் மாத்திரம் சுருக்கப்படுவதிலிருந்து தவிர்த்தல் மற்றும், வடக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு, தற்போது வழங்கப்படும் முக்கியத்துவம் குறைக்கப்படும் சாத்தியங்கள் அதிகமுண்டு.
ஆகவே, பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான கடப்பாட்டை உயர்நிலையில் பேண முடியும். அதற்கு வடக்கு மாகாண சபையைத் தாண்டிய பொதுக் கட்டமைப்பு அவசியமாகின்றது. அதில், அனைவருக்கும் பொதுவான யாழ். மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், பிரதான இடங்களை வகித்துக் கொள்ள முடியும்.
நினைவேந்தல் ஒழுங்குபடுத்தலில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தோடு, வடக்கு மாகாண சபையும், ஜனநாயகப் போராளிகளும் இணைந்திருந்தனர். ஆனால், நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு, இவர்களிடம் காணப்பட்ட இணக்கப்பாடு என்பது, பெயரளவில் மட்டுந்தான் இருந்தது.
குழறுபடிகள் சார்ந்து, வடக்கு மாகாண சபை மற்றும் ஜனநாயகப் போராளிகளைத் தாண்டி, அதிக விமர்சனம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது முன்வைக்கப்படுகின்றமைக்கு அவர்களே காரணமாகி இருக்கிறார்கள்.
நினைவேந்தல் ஒழுங்கமைப்பை, ‘மாணவர்களும் மக்களும்’ என்கிற அடையாளத்தினூடு முன்னெடுக்கப் போவதாகக் கூறிய மாணவர் ஒன்றியம், ‘யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்’ என்கிற பனர்களைக் கட்டிக்கொண்டு, மோட்டார் சைக்கிள் பவனி வந்ததும் பிரச்சினைக்குரிய விடயம். நீங்களே வரையறைகளை வகுத்துக் கொண்டுவிட்டு, அதிலிருந்து நீங்களே விலகிச் செல்வது என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
நினைவேந்தல் நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்கள் சார்ந்து முழுமையான விளக்கமொன்றை மாணவர் ஒன்றியத்தினர் வெளியிட வேண்டும். அத்தோடு, அதில், தம்மால் ஏற்பட்ட தவறுகள், குழறுபடிகள் சார்ந்து எந்தவித தயக்கமும் இன்றி மக்களிடம் மன்னிப்பும் கோர வேண்டும்.
அதுதான், அவர்கள் மீது நம்பிக்கையிழந்திருக்கும் மக்களைச் சரிசெய்வதற்கான வழிமுறை. அதைவிடுத்து, ‘பேஸ்புக்’ அடிதடிகளுக்குள் நின்று, ‘கம்பு சுற்றுவதால்’ எந்தப் பயனும் இல்லை. அது, பொறுப்புகளை உணரத்தவறியவர்கள், விமர்சனங்களை எதிர்கொள்ளத் தவறியவர்கள் என்கிற நிலையை, உங்கள் மீது ஏற்படுத்தும்.
கடந்த மே 17ஆம் திகதி, சிங்களச் சகோதரர்களும் கலந்து கொண்ட ‘முள்ளிவாய்க்கால்- 9 ஆண்டுகள்’ என்கிற கலந்துரையாடல் நிகழ்வொன்றில், தமிழ்ச் சகோதரர் ஒருவர், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒழுங்குபடுத்துதல் சார்ந்து, எழுந்துள்ள குழப்பங்களை வேதனை வெளியிட்டார். அதில் ஏமாற்றத்தின் அளவு அதிகமாக இருந்தது.
ஆனால், “முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பொதுக்கட்டமைப்பின் கீழ்கொண்டு வருவதற்கான ஆரம்பக் கட்டங்களில், இவ்வாறான சின்னச் சின்னக் குழப்பங்கள் சாத்தியம்தான். விடயங்கள் சீக்கிரத்திலேயே சரிசெய்யப்பட்டுவிடும்” என்று நம்பிக்கையோடு, மற்றவர்களால் பேசப்பட்டது. ஆனால், அடுத்தநாள் காலையிலேயே, அந்த நம்பிக்கையின் கட்டங்கள் சிதைக்கப்படும் காட்சிகள் அரங்கேறின.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ‘சீசன்’ முடிந்துவிட்டது, ஏற்பட்ட குழப்பங்களுக்கு ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி ஓய்ந்தாகிவிட்டது என்கிற கட்டங்களைக் கடந்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதுதான், இப்போது முக்கியமானது.
எந்தவொரு தரப்பும் ‘நாம்தான்’ என்கிற ஏகநிலை எடுத்துக்கொள்ளாத வகையில், பொதுக்கட்டமைப்பை இப்போதே உருவாக்க வேண்டும்.
இல்லையென்றால், குறுகிய அரசியல் நலன்களுக்குள் தமிழ்த் தேசிய அரசியல் நலன் ஒட்டுமொத்தமாக அல்லாடுவதுபோல, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் அல்லாடும். அது, அபத்தமானது; அது, தோல்விகளின் பாதைகளையே எமக்குக் காட்டும்.
(புருஜோத்தமன் தங்கமயில்)
-tamilmirror.lk