தமிழர்களின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திய போராட்ட வீரர்களை இன்று எவரும் கவனிக்காத நிலைமை காணப்படுவதாக ஜன நாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று அழுத்தப் புண் (படுக்கைப் புண்) காரணமாக மரணமடைந்த முன்னாள் போராளி தேவாவின் குடும்பத்தினரைச் சந்தித்தபின் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடிய முன்னாள் போராளி தேவா, போரில் படுகாயம் அடைந்து இடுப்புக்கு கீழ் இயங்காமல் பல வருட காலங்கள் தொடர்ச்சியாக படுத்த படுக்கையாக கிடந்த நிலையில் படுக்கைப் புண் தீவிரம் அடைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணித்தார்.
தேவாவின் மனைவியும் யுத்தத்தில் காயப்பட்டவர் என்பதுடன் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். போருக்குப் பின்னர் வறுமையின் கொடுமையில் அவதிப்பட்டு கொண்டிருந்த இவர்களை யாருமே திரும்பி பார்க்கவில்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும் உயிரிழை எனும் தன்னார்வ அமைப்பின் உறுப்பினராக தேவா உள்ளமையினால் அந்த அமைப்பின் ஒரு பயனாளியாக விளங்கினார்.
எவ்வாறாயினும் தேவா மற்றும் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்கோ பிள்ளைகளின் படிப்பிற்கோ குடும்பத்தின் வாழ்வாதார நிமிர்வுக்கோ எவரும் உதவ முன்வரவில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே தேவா கடந்த ஞாயிறன்று மரணமடைந்தார்.
இவ்வாறிருக்கையில், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி நேரில் சென்று தேவாவுக்கு அஞ்சலி வணக்கம் செலுத்தியதுடன், குடும்பத்தினரின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடிய வகையில் 20000 ரூபாய் நிதி அன்பளிப்பும் வழங்கினார்.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே தேவா மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,
“தமிழர்களின் உரிமைக்கான விடுதலை போராட்டத்துக்கு அவர்களை ஆகுதி ஆக்கிய தியாகிகள் இன்று எவரும் கவனிப்பார் இல்லாமல் அநாதரவாக காணப்படுகின்றனர். இவர்களின் விடயத்தில் குருடர்களாகவும் செவிடர்களாகவும், இதயம் இல்லாதவர்களாகவும் தமிழ் உணர்வாளர்கள் நடந்து கொள்வது பெரிதும் கவலை தருகின்றது. போராளி தேவா மரணித்து விட்டார். ஆயினும் அவரின் குடும்பத்தின் அவல நிலை மிக அதிகமாக தொடரவே செய்கின்றது. எமது மத்தியில் எத்தனையோ தேவாக்கள் இப்போதும் உள்ளனர். இவர்களுக்கும், இவர்களின் குடும்பங்களுக்கும் உதவி செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனினதும் செஞ்சோற்றுக் கடமை ஆகும்” என்றார்.
-athirvu.in