மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் பினாங்கு கிளை, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நேற்று மலேசிய வான் போக்குரவத்து ஆணைய (மாவ்கோம்)த் தலைவரின் மாதச் சம்பளம் ரிம85,000 என்று அறிவித்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இவருக்கே இவ்வளவு என்றால், நிலப் போக்குவரத்து ஆணையம் (ஸ்பாட்), தேர்தல் ஆணையம் முதலிய மற்ற அமைப்புகளின் தலைவர்களுக்கு எவ்வளவு கொடுக்கப்படும் என்று தொழிலாளர்கள் உரக்க சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் என எம்டியுசி பினாங்கின் செயலாளர் கே.வீரையா கூறினார்.
இவ்வளவு சம்பளம் கொடுப்பது நாட்டின் நிதி மூலங்களை விரயமாக்கும் செயல் என்றாரவர்.
“இது முறையற்றது, நியாயமற்றது, கண்டிக்கத்தக்கது என்றுகூட சொல்லலாம்”, என்றார்.
நாட்டு மக்களில் பெரும்பாலோர் நடுத்த மற்றும் குறைந்த வருமானம் என்னும் விஷ வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஒரு சிலருக்கு நியாயமற்ற முறையில் இவ்வளவு சம்பளம் வழங்கப்படுவதை நாட்டின் வாய்ப்புக்குறைந்த உழைக்கும் வர்க்கத்துக்கு இழைக்கப்படும் அநீதியாக எம்டியுசி பினாங்கு கருதுவதாக வீரையா கூறினார்.
நேற்று மாவ்கோம் தலைவரின் சம்பளத்தை அறிவித்த லோக், அது பிரதமரின் அடிப்படைச் சம்பளத்தைவிட நான்கு மடங்கு அதிகமாகும் என்றார். பிரதமர் சம்பளம் ரிம20,000.