நாடு மற்றும் அதிபர் கிம் ஜோங் -உன் குறித்து வட கொரிய மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

வட கொரியாவில் சாமானியர்களுடன் வெளியாட்கள் பேசுவது அவ்வளவு எளிதல்ல. தீவிரமான சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் அங்குள்ள சாமானியர்களுக்கு வெளி உலக தொடர்பு முற்றாக தடை செய்யப்பட்டு இருக்கிறது.

சிறை தண்டனை மற்றும் மரண அச்சுறுத்தல் இருக்கும் போதும், பிபிசி விக்டோரியா டெர்பிசைர் திட்டத்தில் பேச இரண்டு வட கொரியர்கள் முன் வந்தார்கள்.

கடவுளின் இடத்தில்

வட கொரியாவில், அதன் தலைவர் கிம் ஜோங் உன் கடவுளின் இடத்தில் இருக்கிறார். அவரை கேள்வி கேட்பது என்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று.

அனைத்தும் அறிந்தவர் கிம் ஜோங் – உன் வட கொரியா மக்களுக்கு சொல்லப்படுகிறது.

எங்களிடம் சன் ஹூய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேசினார். இதனால் அவர் எதிர்காலமே சிக்கல் ஆகும் என்று அவருக்கு நன்கு தெரியும், ஆனாலும் தைரியமாக பேச முன்வந்தார்.

“கிம் ஜோங் – உன் ஒரு தொழிலதிபராகவே எப்போதும் இருப்பதாக வட கொரியர்கள் விமர்சிக்கிறார்கள்” என்று பரவலாக இருக்கும் மக்களின் அதிருப்தியை பகிர்ந்துக் கொள்கிறார் சன் ஹூய்.

கிம் ஜோங் உன்

“அவர் தனிப்பட்ட முறையில் அவ்வாறாக இருந்தால் பரவாயில்லை. எங்களிடமும் அவ்வாறாகவே நடந்துக் கொள்கிறார். ஆனால் எங்கள் பணத்தை எடுத்துக் கொள்கிறார்” என்கிறார் அவர்.

ரத்தக்காட்டேரி

“இந்த சிறிய மனிதர் தனது சிந்தனை முழுவதையும் ஒரு ரத்தக் காட்டேரியாக தங்கள் பணத்தை உறிஞ்சுவதற்கு மட்டுமே பயன்படுத்துவதாக மக்கள் நினைக்கிறார்கள்” என்று பிபிசி-யிடம் தெரிவித்தார்.

விக்டோரியா டெர்பிசைர் திட்டத்தின் கீழ் பிபிசி பல மாதங்களாக வட கொரியா மக்களிடம் ரகசிய தொடர்பை ஏற்படுத்தி அவர்களிடம் பல கேள்விகளை முன் வைத்து ஒரு உரையாடலை நிகழ்த்தி வருகிறது. அவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

வடகொரியா அரசுக்கு மட்டும் நம்மிடம் பேசிய சன் ஹூய் குறித்த தகவல்கள் தெரியவந்தால், அவருக்கு கடுமையாக தண்டனை கிடைக்கலாம். ஏன் அவர் சிறையில் அடைக்கப்படலாம், மரண தண்டனைகூட கிடைக்கலாம்.

இந்த தண்டனைகள் அவருக்கு மட்டும் அல்ல, அவர் குடும்பத்தில் மூன்று தலைமுறைக்கும் இந்த தண்டனைகள் கிடைக்கும்.

இதுதான் வாழ்நிலை

சன் ஹூய் அவரது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசிக்கிறார். வணிகம் நன்றாக இருந்தால் மட்டும்தான் அவர்களுக்கு மூன்று வேளை உணவு நிச்சயம். அவ்வாறாக இல்லாத போது, அரிசியுடன் கலந்த சோளம் மட்டும்தான் அவர்கள் உணவு.

கிம் ஜோங் உன்

சன் ஹூய் பணி சந்தையில், தெருவோர உணவகங்கள் இருக்கிறது. துணிமணிகள், கடத்தப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை அங்கு விற்கப்படுகின்றன.

வட கொரியாவில் உள்ள ஒரு தினசரி நாளிதழ் தரும் தகவல்களின்படி, இதுபோன்ற சந்தையில் நேரடியாகவும், மறைமுகமாகவும், ஏறத்தாழ 50 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள்.

தென் கொரியாவை தலைமையகமாக கொண்ட சில ஊடகங்கள், வட கொரியா மக்களின் வாழ்க்கை குறித்து செய்தி வெளியிட்டுள்ளன. அந்த ஊடகங்களும், விக்டோரியா டெர்பிசைர் திட்டத்தில் இணைந்து பணியாற்றின.

வட கொரியாவின் இந்த சந்தை வணிகமானது, அதன் தீவிர கம்யூனிச கொள்கையுடன் முரண்படுகிறது. ஆனால், அந்நாட்டின் செயலிழந்த உணவு பங்கீடு அமைப்பு மற்றும் பொருளாதார தடைகள் காரணமாக, இந்த சந்தைகளை அனுமதிக்கிறது.

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. 90-களின் மத்தியில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக லட்சககணக்கான மக்கள் வட கொரியாவில் கொல்லப்பட்டார்கள். அதுபோல நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது கூட காரணமாக இருக்கலாம்.

வதந்திகள் மற்றும் புரளிகளின் பிறப்பிடம்

நூற்றுக்கணக்கான கடைகள் உள்ள இந்த சந்தையானது, வதந்திகள் மற்றும் புரளிகளின் பிறப்பிடமாகவும் உள்ளது.

“அமெரிக்கா அதிபர் வருவதாக இந்த சந்தையில் சிலர் பேசிக் கொண்டு இருந்ததை கேட்டேன்” என்கிறார் சன் ஹூய்.

கிம் ஜோங் உன்

“இந்த சந்திப்பு குறித்தெல்லாம் மக்களுக்கு அதிகம் தெரியாது. ஆனால், இங்கு அனைவரும் அமெரிக்காவை வெறுக்கிறார்கள்.” என்கிறார்.

“எங்கள் வறுமைக்கு காரணம் அமெரிக்காதான். அவர்கள்தான் எங்கள் இருநாட்டையும் (வட மற்றும் தென் கொரியா) பிரித்து, எல்லையை மூடியிருக்கிறார்கள்”

வட கொரியா நாட்டிற்குள் நுழையும் தகவல்கள் அனைத்தும் அந்நாட்டு அரசால் தீவிரமாக கட்டுப்படுத்தப்படுகிறது. அவ்வரசு அமெரிக்காவுக்கு எதிராகவும், அதன் அண்டை நாடான தென் கொரியா குறித்தும் தீவிரமாக பிரசாரம் செய்கிறது.

ஆனால் இப்போது நிலைமை மாறி வருவதாக கூறுகிறார் சன் ஹூய்.

“தென் கொரியாவுடன் சுமூகமாக செல்ல வேண்டுமென்று மக்கள் நினைக்கிறார்கள். தென் கொரியாவுடன் மட்டும் அல்ல அனைவரின் நல்வாழ்விற்காக அமெரிக்காவுடன் இணக்கமாக செல்ல வேண்டுமென்றே மக்கள் நினைக்கிறார்கள்” என்கிறார்.

உள்நாட்டில் எதிர்ப்பு

உள்நாட்டிலேயே வட கொரியா அரசுக்கு எதிரான குரல்கள் எழ தொடங்கி இருப்பதாக கூறுகிறார் சோல் ஹோ (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

விக்டோரியா டெர்பிசைர் திட்டக்குழுவிடம் பேசிய அவர், “மக்கள் தங்களின் அன்றாட வாழ்நிலை குறித்து குற்றஞ்சாட்ட தொடங்கி உள்ளனர். அரசிற்கு எதிராக பேசுவதற்காக, சில சமயம் மக்கள் அரசு படையால் கைது செய்யப்படுகிறார்கள்.” என்று விளக்கினார்.

கிம் ஜோங் உன்

அப்படி கைது செய்யப்படுபவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டு கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான சவக்குழியினை அவர்களே தோண்ட நிர்பந்திக்கப்படுகிறார்கள். பாலியல் வல்லுறவும் இங்கு ஒரு தண்டனை வடிவம்தான்.

அம்னெஸ்டி இண்டெர்நேஷனல் தகவலின்படி, இந்த ஒவ்வொரு சிறை முகாமும் 20,000 பேர் வரை அடைக்கும்படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

சில சமயம் செய்யாத தவறுக்காகவும் மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள். சில அதிகாரிகள் தாங்கள் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக மக்கள் மீது இவ்வாறாக குற்றஞ்சாட்டுகிறார்கள் என்கிறார் சோல் ஹோ.

வெளிநாட்டிலிருந்து முறைகேடாக கொண்டுவரப்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை.

வெளிநாட்டு ஊடகங்களை தங்கள் நாட்டிற்குள் வரவிடாமல் இருக்க வட கொரியா அரசு கடுமையாக முயற்சிக்கிறது. அதற்கு காரணம், வெளிநாட்டு நிகழ்ச்சிகளை பார்க்க நேரிட்டால், மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தங்கள் பிரசாரம் மட்டுப்படும் என்று வட கொரியா அரசு நம்புகிறது. ஆனால், வெற்றிகரமாக, சிலர் சீனாவிலிருந்து பென் டிரைவ் மூலமாகவும், திருட்டு டிவிடிகள் மூலமாகவும் நிகழ்ச்சிகளை பார்க்கத்தான் செய்கின்றனர்.

“ஒரு வேளை இதற்காக நீங்கள் பிடிப்பட்டால், ஒரு பெரும் தொகையை நீங்கள் கையூட்டாக கொடுக்க நேரிடும். ஆனால், அப்படியும் சிலர் அந்த நிகழ்ச்சிகளை பார்க்க விரும்புகிறார்கள்.” என்கிறார் சன் ஹூய்.

யாரையும் சந்தித்ததில்லை

வட கொரியர்களை தவிர என் வாழ்க்கையில் நான் வேறு யாரையும் சந்தித்ததில்லை. வெளி உலகம் வட கொரியர்களை பற்றி என்ன நினைக்கிறது என்று கூட எங்களுக்கு தெரியாது என்கிறார் சோல் ஹோ.

முன்பெல்லாம் இங்கு மக்கள் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து சீனா வழியாக தென் கொரியா செல்வார்கள். ஆனால், இப்போது நாட்டின் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுவிட்டது என்கிறார் அவர்.

சன் ஹூய், “சில சமயம் மக்கள் இங்கிருந்து தப்பி தென் கொரியா சென்றுவிடுவார்கள். அப்படி இங்கிருந்து காணாமல் போவோர்களை, தென் கொரியா சென்றுவிட்டார் என்று சொல்ல மாட்டோம், ‘கீழ் நகரம்’ சென்றுவிட்டார் என்றே சொல்வோம்”என்கிறார். -BBC_Tamil