கூட்டமைப்பினர் பம்மாத்து அரசியலில் இருந்து விடுபட வேண்டும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பம்மாத்து அரசியலில் இருந்து விடுபட வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பமாக மாத்திரம் அல்லாமல் நல்லாட்சி அரசாங்கத்தின் விருப்பமாகவும் உள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி கோரி உள்ளார்.

இவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு அலுவலகத்தில் திங்கள் கிழமை (03.06.2018) திங்கள் கிழமை நடத்திய விசேட ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.,

நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்ததிலும், இந்நல்லாட்சி அரசாங்கம் நீடித்து நிலை பெற்று நிற்பதற்கு மிண்டு கொடுப்பதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கும், பங்களிப்பும் மிக காத்திரமானவை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வார்த்தைகளை நம்பியே தமிழ் மக்கள் நல்லாட்சியை உருவாக்க வாக்களித்தனர். இந்நிலையில் நல்லாட்சியின் நாயகரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதும், இவர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் மீதும் நம்பிக்கை இழந்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா அடங்கலான தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர்கள் கருத்துகளை வெளியிட்டு வருவது சிரிப்புக்கு இடமான விடயம் ஆகும்.

கடந்த மூன்று தசாப்த காலமாக தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தொடர்ந்தேச்சையாக பிணக்க அரசியல் பேசி பேசியே தமிழ் மக்களை பேரழிவுக்குள் தள்ளி நிர்க்கதிக்கு உள்ளாக்கி விட்டனர். இவர்களால் தொடர்ந்து ஏமாற்றங்களை மாத்திரமே அடைந்து வந்திருக்கின்ற தமிழ் மக்கள், நல்ல மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அத்துடன் இனியும் ஏமாற தயாரில்லை என்கிற செய்தியை கடந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கி உள்ளனர். எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்று அரசியலை கைவிட்டு நல்லாட்சி அரசாங்கம் மூலமாக தமிழ் மக்களுக்கான நன்மைகளை இதய சுத்தியுடன் பெற்று கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், நல்லாட்சி அரசாங்கம் கட்டம் கட்டமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றது, தமிழ் மக்களின் காணிகள் விடுவித்து கொடுக்கப்படுகின்றன, வீட்டு திட்டங்கள் கட்டி கொடுக்கப்படுகின்றன, தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி அடைய செய்யவும், தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தமிழ் இளையோர்களுக்கு கௌரவமான தொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கவும் நல்லாட்சி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் கூடிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

நிலைமை இவ்வாறு இருக்க அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு சென்ற நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழர் பிரதேசம் அபிவிருத்தி அடைய கூடாது என்பது தமிழ் அரசியல்வாதிகளின் விருப்பமாக உள்ளது, நாட்டின் ஏனைய அரசியல்வாதிகள் அபிவிருத்தி வேலைகளுக்கான நிதியை தாருங்கள் என்று கேட்டு அரசாங்கத்துடன் சண்டை பிடிக்க அபிவிருத்திக்கான நிதியை தர வேண்டாம் என்று கேட்டு தமிழ் அரசியல்வாதிகள் சண்டை பிடிக்கின்றனர் என்பதாக பேசினார்.

மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுக்க தவறுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் வெகுவிரைவில் அஸ்தமனம் அடைந்து விடும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார், இவர் தமிழ் அரசியல்வாதிகள் என்று குறிப்பிட்டு இருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பினரையே ஆகும்.

ஆக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பம்மாத்து அரசியலில் இருந்து விடுபட வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பமாக மாத்திரம் அல்லாமல் நல்லாட்சி அரசாங்கத்தின் விருப்பமாகவும் உள்ளது.

தீர்க்க கூடிய பிரச்சினைகளை தீர்க்க முடியாத பிரச்சினைகளாக நீடிக்க செய்து அதில் குளிர் காய்கின்ற அரசியல் பாரம்பரியத்தில் இருந்து விடுபடுங்கள் என்று மாவை சேனாதிராசா அடங்கலான தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர்களுக்கு அக்கறையுடன் கூடிய ஆலோசனையை நானும் முன்வைக்கின்றேன்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை நல்லாட்சி அரசாங்கத்திடம் கொண்டு சென்று உரிய தீர்வுகளை பெற்று கொடுப்பதை விடுத்து நல்லாட்சி அரசாங்கத்தை பற்றி மக்கள் முன்னிலையில் வந்து வேண்டும் என்று குறை சொல்வது அநாகரிக அரசியலின் உச்ச நிலை ஆகும் என்பதையும் சுட்டி காட்டுகின்றேன்.

நான் கூறுகின்ற கருத்தையே மிக நாகரிகமான முறையில் அமைச்சர் மனோ கணேசன் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு உபதேசித்து வருகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.

-athirvu.in

TAGS: