யாழில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பம்

யாழில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் கலாச்சாரத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பமாகியுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் “தமிழமுதம்” எனும் தொனிப்பொருளில் இன்று காலை 9.30 மணியளவில் தமிழ் கலாச்சார முறைப்படி இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

தமிழ் பாரம்பரிய கலை அம்சங்களான மங்கள வாத்தியம் முழக்கம், சிலம்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளைக் கொண்ட ஊர்வலம் ப்றவுன் வீதி வழியாக பல்கலைக்கழக மைதானத்தினை வந்தடைந்துள்ளது.

தொடர்ந்து, தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டு கலை,கலாச்சார நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை ஒன்றிணைத்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த தமிழ் விழாவில் பிரதம விருந்தினராக இந்திய தமிழ்நாடு கவின் கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் கு.புகழேந்தி கலந்து சிறப்பித்துள்ளார்.

அத்துடன், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ரட்ணம் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழர்களின் வரலாற்றினையும், வாழ்வையும், அரசியலையும் நிர்ணயிக்கும் வகையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

-http://eelamnews.co.uk

TAGS: