இசைப்பிரியா, பாலச்சந்திரன் கொலைகளின் சூத்திரதாரி மைத்திரிதான்!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாடு சென்றுள்ள நிலையில் அங்கு அவர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் பேசுவதற்காக சென்றுள்ள மைத்திரி, வெளிநாடுகள் ஸ்ரீலங்கா அரசுமீது தலையீட்டையோ, அழுத்தத்தையோ பிரயோகிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சக்களின் குழந்தை மைத்திரிபால இப்போதுதான் பேசத் தொடங்கியுள்ளார்.

ராஜபக்சவுக்கு தப்பாமல் பிறந்த குழந்தை மைத்திரி என்பதை ராஜபக்சே இப்போதுதான் விளங்கியிருப்பார். கொழும்பில் வைத்து, ஐநாவில் விழுத்துறேன், முறிக்கிறேன் என்று கூறிவிட்டு, ஐநா சென்று தானும் ஒரு ராஜபக்ச என்பதை நிரூபித்துள்ளார் மைத்திரி. ஸ்ரீலங்காமீது தலையிட வேண்டாம் என்று மைத்திரி கூறிவிட்டார். தமிழீழம் மீது தலையிட வேண்டாம் என்று நாங்கள் எப்போது சொல்லப் போகிறோம்?

இதிலும் மிக முக்கியமான காமடிகள் நியூயோர்க்கில் நடந்துள்ளன. அமெரிக்கா வாழ் சிங்கள மக்களிடையே பேசி மைத்திரி பெரிய கதை ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளார். கோத்தபாய ராஜபக்சவையோ விஞ்சிய கதை அது. போரின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் சென்னையிலிருந்து விமானங்கள் வழியாக கொத்துக் குண்டு தாக்குதலை நடாத்த இருந்ததாகவும் அதனால் மகிந்த, கோத்தபாய நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டு சினிமா இயக்குனர்கள் யோசிக்காத ஆக்சன் கதை இது. எந்தப் பெரிய புனைகதை எழுத்தாளரும் யோசிக்காத காட்சி இது. இதனை ராஜபக்சக்களும் சரத்பொன்சேகாவும் நிராகரித்துள்ளனர். அப்படி ஒரு தாக்குதல் இடம்பெறுவதாக அப்போது யாருமே கருதவில்லை, அது நிகழவும் இல்லை என்று பொன்சேகா கூறியுள்ளார். ஆனால் இதையெல்லாம் மைத்திரி கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

மகிந்த ராஜபக்சக்களையும் இராணுவத்தையும் காப்பாற்றவே மைத்திரி இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் இறுதி யுத்தத்தின் இறுதி இரண்டு வாரங்களை தானே வழிநடத்தியாகவும் பெருமையை அடித்து விட்டுள்ளார். ஆம் அன்றைய காலத்தில் மகிந்த வெளிநாடு சென்ற நிலையில் மகிந்தவுக்கு பதிலாக, மைத்திரி பதில் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டுள்ளார். இந்தப் பெருமையை தொடர்ந்தே மைத்திரி வைத்த ஆப்பு தொடர்ந்து வருகிறது.

அக்காலத்தில் தான் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்ததாகவும் அப்போது போர்க்குற்றங்கள் எவையும் நடைபெறவில்லை என்று மைத்திரி அமெரிக்காவில் கூறியுள்ளார். இந்தப் பொய்யை சொல்லவே இவ்வளவு கதையும். ஆக, சிங்கள இராணுவத்தை காப்பாற்றவும் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கப் படைகள் புரிந்த இனப்படுகொலையை மறைக்கவுமே மைத்திரி இவ்வாறு கூறியுள்ளார்.

யுத்தத்தின் ராஜா நானே என்று மைத்திரி சொல்வதால், மகிந்தவுடன் தீர்க்க வேண்டிய கணக்குகளை மைத்திரியுடன் நாம் தீர்க்கலாம். இதன்மூலம் மைத்திரி தான் ஓர் இனப்படுகொலையாளி என்பதை ஒப்புக்கொள்கிறார். இவர் பதவியில் இருந்த நாட்களிலேயே பாலச்சந்திரன், இசைப்பிரியா உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். சரணடைந்த போராளிகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். யுத்த களத்தில் போராளிகள் வன்புணர்வு செய்யப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எனவே மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச முதலியோருடன் மின்சாரக் கதிரையில் மைத்திரியும் இருக்க வேண்டியவர். அவரையும் இனப்படுகொலைக்காக தண்டிக்க வேண்டும். வரலாறு எந்தக் குற்றவாளிகளையும் விடாது. தமிழ் தலைவர்கள் மகிந்தவை இனப்படுகொலையாளி என்று சொல்லியபடி, இன்னுமொரு இனப்படுகொலையைாளியை ஜனாதிபதி ஆக்கியுள்ளனர். மைத்திரிக்கு ஆதரவளிப்பதை நிறுத்தி அவரை தண்டிப்பதற்கான வழிமுறைகளை அல்லது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

-http://eelamnews.co.uk

TAGS: