முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் இராஜாங்க அமைச்சராக இருந்த போது விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியிருந்தார்.
அந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து, அவர் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு அரச உயர்மட்டத்தினால் பணிக்கப்பட்டார்.
அத்துடன், சிறிலங்கா காவல்துறையின் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினர்,விஜயகலாவின் உரை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இன்று காலை அவர், திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவுக்கு வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்பட்டார்.
இதையடுத்து, விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கோட்டே நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், உடனடியாகவே கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட விஜயகலா மகேஸ்வரனை, 5 இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிவான் ரங்க திசநாயக்க அனுமதி அளித்தார்.