நேட்டோ படைகள் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்காக, மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. இவ்விவகாரம் மேலும் பல மோசமான விளைவுகளை உருவாக்கும் என பாகிஸ்தான், இராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது என வெளியான தகவல்களையும் அது மறுத்துள்ளது.
கடந்த 26-ம் தேதி அதிகாலை, பாகிஸ்தானின் மொஹ்மந்த் பழங்குடியினப் பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் உள்ள சலாலா எல்லைச் சாவடி மீது, நேட்டோ-ஆப்கன் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், 24 பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் பலியாயினர். இச்சம்பவம், ஏற்கனவே சிக்கலில் உள்ள அமெரிக்கா – பாக்., உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ பொதுச் செயலர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முஸ்ஸன், பாகிஸ்தானிய தலைமையமைச்சர் யூசுப் ரசா கிலானிக்கு எழுதிய கடிதத்தில், “எவ்வித உள்நோக்கமும் இன்றி எதிர்பாராத விதமாக இச்சம்பவம் நடந்து விட்டது” என வருத்தம் தெரிவித்திருந்தார்.
ஆனால், நேட்டோவின் மன்னிப்பு மட்டும் போதாது என பாக்., ராணுவம் காட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாக்., ராணுவ செய்தித் தொடர்பாளர் அதர் அப்பாஸ் கூறியதாவது: “இச்சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. இதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்கனவே பல முறை நடந்து விட்டன. கடந்த மூன்றாண்டுகளில், நேட்டோ நடத்திய தாக்குதல்களில், 72 பாக்., வீரர்கள் பலியாகியுள்ளனர். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். நேட்டோ நடத்திய தாக்குதல் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் அரசு முடிவெடுக்கும்.” இவ்வாறு அப்பாஸ் தெரிவித்தார்.