இரகசியத் தடுப்பு முகாமில் கர்ணல் நகுலன் படுகொலை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்ணல் நகுலன் இலங்கையின் மின்னேரியா பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ‘லங்கா நியூஸ் வெப்’ எனும் இலங்கை செய்தி இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கர்ணல் நகுலன் கடந்த 2009-ம் ஆண்டின் பிற்பகுதியில் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

2007-ம் ஆண்டு மே மாதம் ஏறாவூரில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் சடலங்களுக்கு அருகிலிருந்து மீட்க்கப்பட்ட கர்ணல் நகுலனின் அடையாள அட்டையை வைத்து, அவர் கொல்லப்பட்டுவிட்டதாக, 2007 ஜுன் 8-ம் நாள் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், கர்ணல் ராமுடன் செய்மதி தொலைபேசி மூலம் கொண்டிருந்த தொடர்பாடல் சமிக்ஞையை அடிப்படையாக கொண்டு, திருகோணமலையில் வைத்து கர்ணல் நகுலனை 2009-ம் ஆண்டு பிற்பகுதியில் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

கர்ணல் நகுலன் கொல்லப்பட்டுவிட்டார் என்று ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சு அறிவித்து விட்டதால், தமது செய்தி பொய்யாகி விடும் என்பதாலும் புலம்பெயர் தமிழர்களுடன் இவர் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாலும் இவரது கைது பற்றி எந்தவொரு ஊடகங்களுக்கும் தெரிவிக்காமல், சிறீலங்கா அரசு இரகசியமாகவே வைத்திருந்தது.

ஆனால், புலம்பெயர் தமிழர்கள் பற்றிய தகவல்களை கர்ணல் நகுலனிடம் இருந்து பெறுவதற்கு பலமுறை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சிறீலங்கா படையினருடன் ஒத்துழைக்க மறுத்ததால், நகுலன் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெறமுடியவில்லை. இந்நிலையில், அவர் எந்தவகையிலும் பயன்படமாட்டார் என்று உணர்ந்து கொண்ட இராணுவப் புலனாய்வாளர்கள், உயர்மட்ட பணியகத்தில் இருந்து வந்த உத்தரவை அடுத்து கர்ணல் நகுலனை படுகொலை செய்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.

கர்ணல் நகுலன் தடுத்து வைக்கப்பட்டிருந்த மின்னேரியா தடுப்பு முகாமில் மேலும் பல புலிகள் இயக்கத் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் ‘லங்கா நியூஸ் வெப்’ இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.