இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் காவல் துறையினரால் புதிதாக வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவ உதவியுடன் சோதனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மர்ம மனிதர்கள் என்று கூறப்படும் அடையாளம் தெரியாத ஆட்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் ஒருவித பீதி காணப்படும் சூழ்நிலையில், பாதுகாப்பு தரப்பினரால் இவ்வகையான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில கிராமங்களில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் வீடு வீடாகச் சென்று தங்கியிருப்போர் விவரங்களைத் திரட்டியுள்ளனர்.
சில இடங்களில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டதால் அவ்விடங்களில் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நாளாந்தம் இடம்பெற்றும் வரும் மர்ம மனிதர்கள் என்று கூறப்படும் நபர்களின் வன்முறைகள் தொடருகின்றன.
கடந்த இருதினங்களில் பெண்களுக்கு எதிராக நடந்த நான்கு வன்முறைகளில் மூன்று பெண்கள் கீறல் காயங்கிளுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் மீது தொடுக்கப்படும் இந்த மர்மமனிதர்களின் வன்முறை சம்பவங்களின் பின்னணியில் இலங்கை அரச படைகள் செயல்பட்டுவருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.