‘தேச துரோகிகளால்’ இறக்குமதி செய்யப்பட்ட நெகிழிக் கழிவுப் பொருள் அடங்கிய கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்படும்

நெகிழிக் கழிவுப் பொருள்களைக் கொண்ட கொள்கலங்களை நாட்டுக்குள் கடத்தி வந்தவர்களை “தேச துரோகிகள்” என்று வருணித்த எரிபொருள், அறிவியல், தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ இன், அவற்றில் 60 கொள்கலன்கள் எந்தெந்த நாட்டிலிருந்து வந்தனவோ அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படும் என்றார்.

அவற்றில் 3,000 மெட்ரிக் டன் நச்சுத்தன்மை வாய்ந்த நெகிழிக் கழிவுப் பொருள்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சர் கிள்ளான் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கூட்டு நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

அக்கொள்கலன்கள், அமெரிக்கா, ஜப்பான், சீனா, கெனடா, நெதர்லாந்து, ஜெர்மனி, சவூதி அராபியா, சிங்கப்பூர், வங்காள தேசம், நோர்வே, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.