உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்பு? 3000 முஸ்லிம்கள் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து நாடு தழுவிய ரீதியில் சிறிலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினரும், பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் முன்னெடுத்துள்ள பாரிய தேடுதல்கள் மற்றும் சுற்றிவளைப்புக்களின் போது இதுவரை 3000 முஸ்லிம்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அதிர்ச்சித் தகவலொன்றை தெரிவித்துள்ளார்.

தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய ஷஹ்ரான் ஹாஷீம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்புடைய 170 பேருக்கு உட்பட்டவர்களே இருப்பதாகக் கூறிய அரசாங்கம் எதற்காக 3000 முஸ்லிம்களை கைது செய்து சிறை வைத்திருக்கின்றது என்றும் கேள்வி எழுப்பியுள்ள பிரதி அமைச்சர், இது தொடர்பில் ஸ்ரீலங்கா அரச தலைவர் மற்றும் பிரதமரிடம் வினவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நேற்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் இந்தத் தகவல்களை தெரிவித்திருக்கின்றார்.

-athirvu.in

TAGS: