இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள், ஆளுநர்கள் பற்றிய புகார்களை ஏற்க போலீஸார் நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தொடர்பான புகார்களை ஏற்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவர்களை பற்றிய புகார்களை முன்வைப்பதற்கு மூன்று சிரேஷ்ட அதிகாரிகளை கொண்ட குழுவொன்று போலீஸ் தலைமையகத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

காலை 8 முதல் மாலை 4 மணி வரை செயல்படும் இந்த புகார் பதிவு அலுவலகத்தில், இந்த மூவர் பற்றிய புகார்களை இன்று செவ்வாய்க்கிழமை முதல் வரும் 12ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தொடர்புள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.

அத்துடன், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோருக்கு சார்பாக கருத்து தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி விசாரணை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் கடந்த 31ஆம் தேதி இந்த மூவரும் பதவி விலக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இந்தப் போராட்டம், வலுப்பெற்று, கண்டி நகரில் நேற்றைய தினம் அனைத்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், ஆளுநர்களாக பதவி வகித்த அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் ஜனாதிபதிக்கு தங்கள் ராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்திருந்தனர்.

ஜனாதிபதி

அத்துடன், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரும் தங்கள் பதிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் விரைவாக விசாரணைகள் நடத்தி, ஒரு மாதத்திற்குள் இந்த விசாரணைகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக நேற்றைய தினம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில், அத்துரெலிய ரத்தன தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த பின்னணியில், வெற்றிடமான மேல் மாகாண ஆளுநர் பதவிக்கு, முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் பதவி பிரதாணம் செய்துக் கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவி பிரமாணம் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இவ்வாறான பின்னணியிலேயே, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூன்று முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான புகார்களை முன்வைக்க பொதுமக்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil

TAGS: