அன்வார் குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் (விரிவாக)

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு மீது எதிர்வாதம் செய்வதற்கு எதிர்பாராத வகையில் சாட்சிக் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பதற்குப் பதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுத்தார். 

அன்வாருக்கு மூன்று வழிகள் இருந்தன- சாட்சிக் கூண்டிலிருந்தவாறு சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு சாட்சியமளிப்பது, குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுப்பது (இதில் அவரை குறுக்கு விசாரணை செய்ய முடியாது )அல்லது மௌனமாக இருப்பது.

இன்று காலை நீதிமன்றம் கூடிய போது அந்த மூன்று வழிகளையும் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா எடுத்துரைத்தார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுக்க விரும்புவதாக அன்வார் நீதிபதி ஜபிடினிடம் கூறினார். அரசாங்கத் தரப்பு அவரை கேள்வி கேட்க முடியாது என்பது அதன் பொருள் ஆகும்.

சாட்சிக் கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுத்தால் அரசு தரப்பு குறுக்கு விசாரணைக்கு அன்வார் உட்பட வேண்டியிருக்கும். அதனால் ஆதாரங்களுக்கு கூடினபட்ச முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த முதலாவது இரண்டு வழக்கு விசாரணைகளில்,  அதிகார அத்துமீறல், குதப்புணர்ச்சி 1 குற்றச்சாட்டுக்கள் மீதான எதிர்வாதத்தில் அன்வார் சாட்சிக் கூண்டிலிருந்து வாக்குமூலம் அளிப்பதைத் தேர்வு செய்தார்.

2008ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி பிற்பகல் மணி 3.01க்கும் மாலை மணி 4.30க்கும் இடையில் தேசா டமன்சாரா ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றில் தமது முன்னாள் உதவியாளரான 25 வயது முகமட் சைபுல் புஹாரி அஸ்லானைக் குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக அன்வார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அன்வார் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தமது வாக்குமூலத்தை வழங்கினார். முதல் ஒரு மணி நேரம் நின்று கொண்டும் அடுத்த ஒரு மணி நேரம் அமர்ந்து கொண்டும் அவர் அதனை வழங்கினார். அவர் ஏன் இந்த வழியைத் தேர்வு செய்தார் என அன்வாரிடம் வினவப்பட்ட போது நீதிமன்றம் தமக்கு நியாயமாக நடந்து கொள்ளவில்லை என அவர் பதில் அளித்தார்.

“நீதிமன்றம் என் மீது முன்-தீர்ப்பு கொடுத்துள்ளது. எல்லா சட்ட வழிகளையும் பின்பற்றுவதற்கு உரிமை இருந்த போதிலும் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு என்னை தாக்கியுள்ளது,” என்றார் அவர்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுப்பதை தாம் தேர்வு செய்ததற்கான காரணத்தை விளக்கும் போது அன்வார் 1963ம் ஆண்டு நிகழ்ந்த நெல்சன் மண்டேலா வழக்கு ஒன்றை மேற்கோள் காட்டினார். தாம் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு மாதம் முன்னதாக அந்த நடவடிக்கையைத் திட்டமிட்டதாகத் தாம் கூறும் இப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது கொண்டிருந்த அவநம்பிக்கையும் ஒரு காரணம் என்றும் அவர் சொன்னார்.

அன்வார் தமது வாக்குமூலத்தில் தம்மை அரசியல் அஸ்தமனத்துக்குள் அனுப்புவதற்கு பிரதமர் நஜிப் வகுத்த  சதி என்பதைத் தவிர இதில் வேறு ஒன்றுமில்லை எனக் கூறினார்.

“இந்த நடவடிக்கைகளில் நீதி நிலை நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையே போய் விட்டது என நான் பிரகடனம் செய்கிறேன்.”

“இது கிரிமினல் வழக்கு விசாரணை அல்ல. தாங்கள் அதிகாரத்தில் தொடர்ந்து இருக்கும் பொருட்டு என்னை செயலிழக்கச் செய்வதற்கு வலிமையானவர்கள் நடத்தும் நாடகம் இதுவாகும்”, என்றார் அவர்.

1998ம் ஆண்டு டாக்டர் மகாதீர் முகமட்டும் அதனையே செய்தார் என அன்வார் மேலும் சொன்னார்.

அந்த நடவடிக்கை அன்வாருடைய பிரதிவாதித் தரப்புக்கு பாதகமாக இருக்கக் கூடும் என சிலர் கருதுகின்றனர்.

கர்பால்: குற்றம் சாட்டப்பட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் அளிப்பது முன்பு நிகழ்ந்துள்ளது

ஏற்கனவே இது போன்று நிகழ்ந்திருப்பதால் நீதிமன்றம் அதனை ( குற்றம் சாட்டப்பட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் ) அனுமதிக்கிறது என அன்வார் தரப்பு தலைமை வழக்குரைஞரான கர்பால் சொன்னார்.

“கடந்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் குற்றம் சாட்டப்பட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் அளித்த வழக்குகள் பல நடைபெற்றுள்ளன.”

“நீதிமன்றம் அன்வாருடைய வாக்குமூலத்தை நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்ட ஆதாரமாக பரிசீலித்து அதற்கு தேவையான வலிமை கொடுக்க வேண்டும்.”

அதனை எப்போது முடிவு செய்தீர்கள் என்ற கேள்விக்குப் பதில் அளித்த அன்வார், தமக்கு எதிராக வழக்கு இருப்பதாகவும் சைபுல் “உண்மையான” சாட்சி என்றும் நீதிபதி முடிவு செய்த பின்னர் அது குறித்துத் தாம் சிந்திக்கத் தொடங்கியதாகத் தெரிவித்தார்.

“நான் இதற்கு முன்னர் என் வழக்குரைஞர்களுடன் அது குறித்து விவாதித்தேன். அதனைத் தயாரிப்பதற்கு எனக்கு சிறிது காலம் பிடித்தது. 1998ல் நான் சாட்சிக் கூண்டைத் தேர்வு செய்தேன். ஆனால் நான் விடுதலை செய்யப்படவில்லை.”

அண்மையக் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டு சில அரசியல் எஜமானர்கள் தம்மைத் தாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டது என்றும் வழக்கை நிரூபிப்பதற்கு  சைபுல், மருத்துவமனை, அரசாங்க இரசாயன நிபுணர்கள் ஆகியோரைப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் அன்வார் தமது இரண்டு மணி நேர வாக்குமூலத்தில் கூறினார்.

குதப்புணர்ச்சி சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் தினத்துக்கு இரண்டு நாள் முன்னதாக சைபுல் நஜிப்பையும் ரோஸ்மாவையும் சந்தித்ததாகவும் முன்னாள் ஐஜிபி மூசா ஹசான், முன்னாள் மலாக்கா போலீஸ் படைத் தலைவர் முகமட் ரோட்வான் முகமட் யூசோப் ஆகியோருடன் தொலைபேசியில் அழைத்ததாகவும் கூறப்படுவது அவரது வாக்குமூலத்தில் ஒரு பகுதியாகும்.

தமக்கு எதிரான அண்மையக் குதப்புணர்ச்சி குற்றச்சாட்டும் அதே நபர்களை- மூசா மற்றும் நடப்பு சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல்- ஆகியோரைப் பின்னணியில் கொண்டுள்ளதாக அன்வார் அதற்கு முன்னர் கூறினார்.

நீதிமன்றமும் நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியாவும் தமக்கு எதிராக (வேறு வகையாக முடிவு இருக்க வேண்டிய நிலையில்) முடிவு செய்த பல சம்பவங்களையும் அன்வார் எடுத்துரைத்தார்.

“விந்து” காணப்பட்டதற்கான நிரூபணம் என அரசு தரப்பு கூறியுள்ளது முற்றிலும் ஆதாரமற்றது என்பதை தமது பிரதிவாதித் தரப்பு ஆதாரங்கள் காட்டும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

“உண்மையில் நிரூபணம் எனக் கூறிக் கொள்ளும் அம்சம் வெறும் ஜோடனையே தவிர வேறு  ஒன்றுமில்லை. ”              

அரசு தரப்பின் கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது அது வழக்கத்திற்கு மாறானது அல்ல. அவர்களிடம் தடயவியல் ஆதாரம் ஏதும் இருந்தால் அதனை உயிர் போல பாதுகாத்திருப்பார்கள். இப்படித் தாறுமாறாக கையாண்டிருக்க மாட்டார்கள்.”

“சைபுல் குதத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரி எனக் கூறப்படுவது கோலாலம்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்துள்ள பரிந்துரை  நிபந்தனைகளுக்கு ஏற்ப பாதுகாக்கப்படவில்லை என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அதனால் அந்த ஆதாரங்கள் திருத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.”

“அந்த மாதிரி திறக்கப்பட்டுள்ளது. மீண்டும் அடைக்கப்பட்டுள்ளது. நாடாவினால் குறியிடப்பட்டுள்ளது. அதனை எளிதாக பிரித்து விடலாம். அத்துடன் அந்த மாதிரி எடுக்கப்பட்ட 90 மணி நேரம் கழித்து இரசாயன நிபுணரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அது ஆய்வுக் கூட சூழ்நிலைகளில் வைத்திருக்கப்படவில்லை. அதுவும் கோலாலம்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்த யோசனைகளுக்கு முரணாக கேள்விக்குரிய முறையில் வைக்கப்பட்டிருந்தன.”

இவ்வளவு முரண்பாடுகள் இருந்தும் நீதிமன்றம் அந்த ஆதாரத்தை ஏற்றுக் கொண்டதாக அன்வார் குறிப்பிட்டார்.