தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ்(எம்ஏஎஸ்) மறைந்து போவதைவிட அதை ஏர் ஏசியாவுக்கு “மணம் செய்து வைப்பது” நல்லது என்கிறார் மூத்த செய்தியாளர் காடிர் ஜாசின்.
ஏர் ஏசியாவும் எம்ஏஎஸ்- ஸும் ஏற்கனவே “மணம் செய்ததுண்டு” ஏன்று 2011-இல் இரண்டும் பங்கு பரிமாற்றம் செய்து கொண்டதை காடிர் நினைவுபடுத்தினார். ஆனால் அந்த ஏற்பாடு எட்டு மாதங்களில் கைவிடப்பட்டது.
“அது கைவிடப்பட்டதும் எம்ஏஎஸ் நிலைமை மேலும் மோசமானது. ஆனாலும் ஏர் ஏசியா இன்னமும் எம்ஏஎஸ்மீது ஒரு கண் வைத்திருப்பதாகவே தெரிகிறது”, என காடிர் அவரது முகநூல் பக்கத்தில் கூறினார்.
“எனவே, அது அப்படியே மறைந்துபோகாமல் இருக்க அதை ஏர் ஏசியாவுக்குக் கட்டி வைப்பதே மேல்”, என்றாரவர்.
எம்ஏஎஸ்-ஸை இழுத்து மூடி விடலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கமும் வரி செலுத்தும் மக்களும் எம்ஏஎஸ்-ஸில் மேலும் பணத்தைக் கொட்டி இழக்கத் தயாராக இல்லை என்பது உண்மைதான். அதற்காக அதை இழுத்து மூடுவதா?
“அதற்கு அவசரப்பட வேண்டியதில்லை என்பேன்”, என்றாரவர்.
எம்ஏஎஸ் உலகளவில் பிரபலமான ஒரு பெயர். அதற்கு நல்ல மதிப்புள்ளது.
அதை விற்றுவிடலாம் என்றார். விற்பது குறித்து வெட்கப்பட வேண்டியதில்லை.
“பணக்கார நாடுகளான சுவிட்சர்லாந்து, ஹாலந்து போன்றவைகூட அவ்ற்றின் தேசிய விமான நிறுவனங்களை முறையே Lufthansa -விடமும் Air France-சிடமும் விற்றிருக்கின்றன”, என்று காடிர் கூறினார்.