ஹாஸிக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்

பிகேஆர் சாந்துபோங் இளைஞர் தலைவர் ஹாஸிக் அப்துல்லா அப்துல் அசீஸ், அண்மையில் கட்சிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்.

ஹாஸிக், கட்சித் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலிமீது “ ஊழல் குற்றச்சாட்டை ஆதாரமில்லாமலேயே சுமத்தியது” உள்பட, கட்சியின் ஒழுங்குவிதிகளை மீறி நடந்து கொண்டதாக பிகேஆர் கட்டொழுங்குக் குழு கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்ததை அடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதற்கு ஹாஸிக், தான் அஸ்மின்மீது குற்றம் சுமத்தவில்லை என்றும் அஸ்மின்மீது அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதால் குற்றச்சாட்டுகளை எம்ஏசிசி விசாரிக்க வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்தியதாக முகநூலில் விளக்கமளித்தார்.

“அஸ்மின் ஊழல் செய்ததாகக் கூறப்படுகிறது அக்குற்றச்சாட்டுகளை எம்ஏசிசி விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்காக நான் தண்டிக்கப்பட்டிருக்கிறேன். அஸ்மின்மீது நான் குற்றம் சாட்டவில்லை”, என்றவர் நேற்று முகநூலில் கூறியிருந்தார்.

“கட்சி எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுகிறேன். ஆனால், கட்சியிலிருந்து விலக்கியதை எதிர்த்து முறையீடு செய்வேன்”, என்றாரவர்.

ஹோட்டல் அறை ஒன்றில் ஆடவர் இருவர் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடும் காணொளி ஒன்று ஜூன் மாதம் வெளிவந்ததைத் தொடர்ந்து ஹாஸிக் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

அந்தப் பாலியல் காணொளியில் உள்ள ஒருவர் தான் என்று ஒப்புக்கொண்ட அவர், மற்றவர் பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி என்றார்.