சீனப் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி: 27 ஆண்டுகளில் மோசமான நிலை

இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிகக் குறைந்த வேகத்தில் செல்கிறது. 1990களுக்குப் பிறகு சீனாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் இவ்வளவு குறைவாக இருப்பது இப்போதுதான் என்பதை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் சீனாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டைவிட 6.2 சதவீதம் வளர்ந்துள்ளது.

வளர்ச்சியைத் தூண்டும் வகையில் செலவீடுகளை ஊக்குவித்து, வரிக் குறைப்புகளையும் அறிமுகப்படுத்தியது சீனா.

அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் சீனாவின் வணிக நலன்களையும், வளர்ச்சியையும் பாதித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.4 சதவீதமாக இருந்த சீனாவின் வளர்ச்சி அடுத்த காலாண்டில் வேகம் குறைந்து 6.2 ஆகியிருக்கிறது.

இந்த புள்ளிவிவரங்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள சிக்கலான சூழ்நிலையைக் குறிக்கிறது என சீனாவின் தேசிய புள்ளிவிவர அமைப்பு கூறியுள்ளது.

மேலும் “இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால் தற்போது கீழ்நோக்கிச் செல்வதற்கான அழுத்தத்தை சந்திக்கிறது” என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தரவுகள்

சீனா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஜி.டி.பி. (மொத்த உள்நாட்டு உற்பத்தி) புள்ளிவிவரத்தின் நம்பகத்தன்மை குறித்து சீனாவை கவனித்து வருகிறவர்கள் ஐயத்தை வெளிப்படுத்துகின்றனர்.

வேறு சில தரவுகள் சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் இருப்பதாகக் கூறுகின்றன.

தொழில்துறை உற்பத்தி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஜூன் மாதம் 6.3 சதவீதம் வளர்ந்துள்ளது. அதேபோல் சில்லறை விற்பனை ஒவ்வொரு ஆண்டுக்கும் 9.8 சதவீதம் வளர்ந்துள்ளது. இரண்டுமே ராய்டர்ஸ் செய்த கணிப்பை விட அதிகம்.

உலக வர்த்தக தாக்கம்

சீனாவில் வளர்ச்சி வேகம் குறைவது, உலகப் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கவலைகள் தோன்றியுள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பொருளாதாரத்துக்கு உதவும் வகையில் செலவினங்களை அதிகரித்து, பல நூறுகோடி வரிகுறைப்பு செய்யும் திட்டத்தை அறிவித்தது சீனா. வங்கிகள் ரொக்க கையிருப்பு வைக்கவேண்டிய அளவைக் குறைத்து பணப்புழக்கத்தை ஊக்குவித்தது.

”மெதுவான பொருளாதார வளர்ச்சி வேகம் நீடிக்கிறது. மேலும் புதிய ஊக்குவிப்பு நடவடிக்கைகளை சீனாவின் மத்திய வங்கி அறிவிக்கும் என்று சந்தை எதிர்பார்க்கலாம்” என்பதை சமீபத்திய பொருளாதாரத் தரவுகள் காட்டுவதாக மூத்த சந்தை பகுப்பாய்வாளர் எட்வர்ட் மோயா கூறியுள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரும் வளர்ச்சியைப் பாதிக்கிறது.

”வர்த்தகபோர் சீனாவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளுள்ள முன்னேற்றம் காண வணிகப் பேச்சுவார்த்தைகள் போராடுகின்றன. இந்நிலையில் இந்த வர்த்தகப் போருக்கு கண்ணுக்கெட்டிய தூரத்தில் முடிவு ஏதும் தெரியவில்லை. எனவே, சீனப் பொருளாதாரம் சந்திக்கக்கூடிய தரைமட்ட வீழ்ச்சி இன்னும் வந்துவிடவில்லை” என்கிறார் அவர்.

ஜப்பானில் நடந்த G-20 மாநாட்டில் சீனா- அமெரிக்கா என்ற இரு தரப்பும் வர்த்தகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டன. ஆனால், அதற்கு முன்பே இரு நாடுகளும் ஒன்றின் பொருள்கள் மீது மற்றொன்று பலநூறுகோடி டாலர் மதிப்புள்ள வரிகளைவிதித்து, வர்த்தகத்தைப் பாதித்துவிட்டன; அதனால், உலகப் பொருளாதாரத்தின் மீது இருள் படரத் தொடங்கிவிட்டது. -BBC_Tamil