தேவை குழப்பமற்ற ஒன்றுபட்ட மலேசியா- ஆகோங்

ஒன்றுபட்ட மலேசியா அதுவே யாங் டி பெர்துவான் ஆகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாதுடின் அல்- முஸ்டபா பில்லா ஷாவின் பிறந்த நாள் விருப்பமாகும்.

ஆனால், அந்த விருப்பம் அண்மைய எதிர்காலத்தில் நிறைவேறும் என்று சொல்லும் “துணிச்சல்” தமக்கில்லை என்றாரவர். சுல்தான் அப்துல்லா வரும் செவ்வாய்க்கிழமை தம் 60ஆவது பிறந்த நாளில் 16வது பேரரசராக அரியணை அமர்வார்.

“ உண்மை நிலையைத்தான் சொன்னேன். அது (ஒன்றுபட்ட மலேசியா) நடக்கும் என்று சொல்லும் துணிச்சல் எனக்கு இல்லை. ஆனால், அதுதான் என் விருப்பம். அடுத்த ஐந்தாண்டுகளில் நம் நாடு குழப்ப நிலையில் இருந்தால் அது எனக்கு மிகுந்த வருத்தம் தரும்.

“அப்படி ஒரு நிலை வேண்டாம் எனப் பிரார்த்தனை செய்ய மட்டுமே என்னால் முடியும். நாட்டு மக்கள் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் எச்சரிக்கையாகவும் விவேகமாகவும் நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்”, எனப் பேரரசர் த ஸ்டார் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில்
கூறினார்.

பகாங் ஆட்சியாளரான சுல்தான் அப்துல்லா கடந்த ஜனவரி 31-இல் நாட்டின் 16வது மாமன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மன்னர் என்பவர் மலாய்க்காரர்களையும் இஸ்லாத்தையும் மட்டும் பிரதிபலிக்கவில்லை, எல்லா இனங்களையும் அவர் பிரதிநிதிக்கிறார் என்றாரவர்.

“மலாய் ஆட்சியாளர்கள் எல்லா இனங்களுக்கும் சுல்தான்கள்தான்.

“மலாய்க்காரர்களுக்கு மட்டும்தான் சுல்தான்கள் என்று நினைக்காதீர்கள். அப்படி அல்ல”, என்று சுல்தான் அப்துல்லா குறிப்பிட்டார்.

.