ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் உள்ளடக்கிய பொது நிபந்தனைகளை முன்வைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
அதற்காக, முதற்கட்டமாக தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி தலைமையிலான அணியினர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் முக்கிய சிவில் அமைப்புக்களை ஒருமேசைக்கு கொண்டுவருவது பற்றிய ஆராயப்படுகின்றது.
இவ்வாறு அனைத்து தமிழ்த் தேசிய அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்களை ஒருங்கிணைக்கும் பணிகளை தமிழ் மக்கள் பேரவையினரும், மதத்தலைவர்கள் சிலரும் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் அறிய முடிகின்றது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் சஜித் பிரேமதாசவும், பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும், மக்கள் சக்தி சார்பில் அநுரகுமார திசாநாயக்கவும் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் இம் மூன்று தரப்பினரில் யார் தேர்தலில் வெற்றி பெறுவதாயினும் சிறுபான்மை தரப்பினரின் ஆதரவு அவசியமாக உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் முற்போக்கு கூட்டணி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியில் அங்கத்துவத்தினைக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் ஆதரவினை பெறுவதற்கு மேற்படி மூன்று தரப்புக்களும் அதீத பிரயத்தனங்களையும் வெவ்வேறு பட்ட உபாயங்களையும் கையாண்டு வருகின்றன.
இப்பின்னணியில் தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்களும், சிவில் அமைப்புக்களும் பிரிந்து நிற்கின்ற தருணத்தில் தென்னிலங்கை பிரதான அரசியல் சக்திகளுக்கு வலுவான பேரம்பேசலை செய்யமுடியாத நிலைமைகள் ஏற்படுவதற்கே அதிகமான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
ஆகவே தமிழ்த் தேசிய தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இனப்பிரச்சினை தீர்வு உட்பட ஜனாதிபதியின் அதிகாரங்களுகளை பயன்படுத்தி தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க கூடிய விடயங்களை ஒன்றிணைந்து நிபந்தனையாக முன்வைப்பதன் மூலமே தமிழ் மக்களின் இருப்பு உறுதியாவதுடன் எதிர்காலத்தில் தீர்வுகளை பெறுவதற்கான நிலைமைகளும் ஏற்படும் என்றும் கருதப்படுகின்றது.
இந்நிலையிலேயே தற்போது தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் சம்பந்தமாக, இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி ஆகிய தரப்புக்களுடன் ஆரம்ப பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்துவரும் நாட்களில் ஏனைய தரப்பினருடம் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான தயார்படுத்தல்கள் இம்பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
-வீரகேசரி