கொல்லைப்புற வழியாக பதவிக்கு வர முயல வேண்டாம்- டிஏபி எச்சரிக்கை

கடந்த பொதுத் தேர்தலில் தோற்றவர்கள் கொல்லைப்புற வழியாக அரசாங்கத்தில் இடம்பெற முயற்சி செய்யக்கூடாது. அம்னோ எம்பி ஹிஷாமுடின் ஹஷிம் ஒரு புதிய அரசாங்கம் அமைக்க முயல்வதாகக் கூறப்படுவதை அடுத்து டிஏபி அந்த எச்சரிக்கையை விடுத்தது.

கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் பக்கத்தான் ஹரப்பானுக்கு நாட்டை ஆளும் அதிகாரத்தைக் கொடுத்தார்கள். அதை மதிக்க வேண்டும் என்று டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.

“அவர்கள் (தேர்தலில்) தோற்றார்கள். ஆளும் உரிமை எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதை எதிரணியினர் உள்பட, அனைவரும் மதிக்க வேண்டும்.

“தோற்றுப்போனவர்கள் பின்வாசல் வழியாக அமைச்சராக முயலக் கூடாது”, என லொக் இன்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஹிஷாமுடின் டிஏபியையும் அமனாவையும் விலக்கி வைத்துவிட்டு . ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்கத் திட்டமிடுகிறார் என்று நேற்று அறிக்கை விடுத்த ஐந்து ஹரப்பான் தலைவர்களில் லொக்கும் ஒருவராவார்.

அந்த அறிக்கையில், அவருடன் ஹரப்பான் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா, பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், பெர்சத்து தலைமைச் செயலாளர் மர்சுகி யாஹ்யா, அமனா தலைமைச் செயலாளர் அனுவார் தாஹிர் ஆகியோரும் கையெழுத்திட்டிருந்தனர் .

இதனிடையே, ஹிஷாமுடின் தான் அப்படி ஒரு சதித் திட்டம் தீட்டுவதாகக் கூறப்படுவதையும் அன்வார் இப்ராகிம் அடுத்த பிரதமராவதைத் தடுக்க முனைவதாகக் கூறப்படுவதையும் மறுத்துள்ளார்.