வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்

வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ பல்வேறு பொருள்களுடன் நான்கு வாகனங்களில் பயணப்பட்ட எட்டு தொண்டூழியர்கள் 2மீட்டர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.

கோலாலும்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்ற மலேசிய அனைத்துலக் தேடல் மற்றும் மீட்புக் குழு(மிசார்)வைச் சேர்ந்த அந்த எண்மரும் நேற்றிரவு 8 மணிக்கு அந்த எதிர்பாராத சம்பவத்தை எதிர்நோக்கினர்.

ஜெர்தேயில் கம்போங் தெனாங், கம்போங் லா ஆகியவற்றில் உதவிப் பொருள்களை விநியோகித்துவிட்டு வேறோர் இடத்துக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்கள் என பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பிரண்டெண்ட் அப்துல் ரொசாக் முகம்மட் கூறினார்.

தொண்டூழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தங்கள் பயணம் பற்றி வெள்ளக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தெரிவிக்காமல் சென்றதுதான் அவர்களின் சிக்கலுக்குக் காரணம் என்றாரவர்.

“எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எண்ணம் கொண்டவர்கள் தங்கள் திட்டம் குறித்து போலீசுக்கு அல்லது திரெங்கானு பேரிடர் மேலாண்மை செயலகத்துக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.