பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுவதை மறுக்கிறார் அன்வார்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அவர்மீது அவரின் முன்னாள் ஆய்வு அதிகாரி முகம்மட் யூசுப் ராவுத்தர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டை மறுத்தார்.

அன்வார் கடந்த ஆண்டு அக்டோபர் 2-இல் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்  என்பது   யூசுப்  முன்வைத்துள்ள  குற்றச்சாட்டு.

ஆனால்,   அன்வார்   குறிப்பிட்ட அந்நாளில் இடைத் தேர்தல் பரப்புரைக்காக போர்ட் டிக்சனில் இருந்ததாகக் கூறினார்.

“அந்நாளில் இடைத்தேர்தலுக்காக பரப்புரை செய்து கொண்டிருந்தேன். அத்துடன் கோலாலும்பூரில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் நிகழ்வு ஒன்றிலும் கலந்து கொண்டேன். அது முடிந்து பரப்புரையைத் தொடர்வதற்கு மீண்டும் போர்ட் டிக்சன் சென்றேன்”, என  இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் தன் தனிச் செயலாளர் ஷுக்ரி சாஅட் போலீஸ் புகார் ஒன்றைச் செய்வார் என்றும் தன்னுடைய வழக்குரைஞர் ராம்கர்பால் சிங் வழக்கு தொடுக்கப்போவது குறித்து யூசுப்புக்குக் கடிதம் அனுப்புவார் என்றும் சொன்னார்.

இது, பிகேஆர் மாநாடு மற்றும் பிரதமர் பதவி மாற்றிவிடப்படுதல் ஆகியவை நடைபெறவுள்ள வேளையில் தன்னைக் களங்கப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒரு முயற்சி என்றும் அன்வார் கூறினார்.

யூசுப் நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் சத்திய பிரமாணமொன்றை வாசித்து அன்வார்மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தினார்.