பொது மருத்துவர்களுக்கான கட்டண வரம்பு அகற்றப்படும்- சுகாதார அமைச்சர்

அமைச்சரவை பொது மருத்துவர்கள்(ஜிபி) மற்றும் பல் மருத்துவர்களுக்கான கட்டண உச்சவரம்பை அகற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. அம்முடிவு அமலுக்கு வருமானால் அதன் பிறகு இவ்வளவுதான் கட்டணம் விதிக்கலாம் என்ற உச்ச வரம்பு இருக்காது.

“ எது பொருத்தமான கட்டணம் என்று முடிவு செய்யும் பொறுப்பு பொதுமக்களிடமே விடப்படுகிறது”, எனச் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹமட் ஓர் அறிக்கையில் கூறினார்.

பல இடங்களிலும் விதிக்கப்படும் கட்டணங்களை ஒப்பிட்டு அதில் தங்களுக்கு உகந்தது எது என்பதைப் பொதுமக்களே முடிவு செய்து கொள்ளலாம்.

இக்கொள்கை நடைமுறைக்கு வரும்போது சிகிச்சையைத் தொடக்குவதற்கு முன்பே நோயாளிகளுக்கு அதற்கான கட்டணத் தொகை தெரிவிக்கப்பட வேண்டும்.

அக்கொள்கை எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை அமைச்சர் தெரிவிக்கவில்லை. அதற்குச் சிறிது காலம் பிடிக்கும் என்றாரவர்.