Martin Vengadesan – தமிழில் -சுதா சின்னசாமி – மலேசியாவில் தொடர்ந்து வரும் விவாதங்களில் ஒன்று, கல்விக்கு எந்த மொழி மிகவும் பொருத்தமானது என்பதுதான்.
ஒருவரின் தாய்மொழி அல்லது முதல் மொழியில் கற்பதா, அனைவரும் ஒரு தேசிய மொழியைப் பயன்படுத்துவதா அல்லது ஆங்கிலம் போன்ற ஒரு சர்வதேச மொழியைப் பயன்படுத்துவதா – இதில் எதை தேர்வு செய்தால் மாணவர்களை பிற்கால வாழ்க்கையில் சிறந்த முறையில் தயார் செய்யும் என்பதைத் தீர்மானிப்பது – இது ஒரு தொடர்ச்சியான மற்றும் உணர்ச்சி வசப்பட வைக்கும் ஒரு விவாதம்.
மொழியியலாளர் கிர்க் பெர்சன் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தாய்லாந்தில் கழித்த ஒரு அமெரிக்கர். அவர் ஒரு சிறிய பழங்குடியினர் குழுவினருக்கு தங்களின் சொந்த எழுத்து மொழியை உருவாக்கி வளர்க்க முன்னோடியாக நின்று வேலையைச் செய்து உதவுகிறார்கள்.
வெளிநாட்டு மொழியை” திணிப்பதை விட, வீட்டில் பேசும் மொழியே சிறந்த பலன்களை தரும்
சிறுபான்மை குழுக்கள், முதலில் தங்கள் சொந்த மொழியில் ஆரம்ப பள்ளிப்படிப்பைத் தொடங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தவும், பின்னர் படிப்படியாக அம்மாணவர்கள் ஐந்தாவது அல்லது ஆறாவது ஆண்டுக்குள் தேசிய மொழியில் ஒன்றிணைவதற்கும் அவர் உதவியுள்ளார்.
ஒரு மாணவரின் கல்வியை பொருத்தவரை, அவர்களை அந்நியப்படுத்தக் கூடிய ஒரு “வெளிநாட்டு மொழியை” திணிப்பதை விட, அவர்கள் வீட்டில் பேசும் மொழியில் கல்வியை தொடங்குவதே சிறந்த பலன்களை தரும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார் பெர்சன்.
இது, மலேசியாகினிக்கு சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் கூறியதாகும். இதனால் மாணவர்களிடையே பள்ளியை விட்டு வெளியேறும் விகிதம் அதிகரிப்பதோடு நடைமுறை கல்வியறிவின்மைக்கும் வழிவகுக்கிறது. ஒரு ஊக்குவிக்கும் சூழலில் அவர்கள் இருந்தால், இன்னும் சிறப்பாக செயல்பட்டு வளர்ந்திருப்பார்கள் என்கிறார் பெர்சன்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், தாய்மொழி என்பது வீட்டில் முக்கியமாக பேசப்படும் மொழியைக் குறிக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது ஒருவரின் பாரம்பரிய மொழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு அவர் தன்னையே ஒரு எடுத்துக்காட்டு என்று மேற்கோள் காட்டி, தனது பேச்சு வழக்கு முதல் மொழி அல்லது தாய்மொழி ஆங்கிலம் என்று கூறினார், ஆனால் அவரது பாரம்பரிய மொழி உண்மையில் ஸ்வீடிஷ் ஆகும்.
பெர்சன் SIL இன்டர்நேஷனல் நிறுவனத்தின் வெளி உறவு இயக்குநராக உள்ளார். இது ஒரு நம்பிக்கை அடிப்படையிலான இலாப நோக்கற்ற அமைப்பானதாகும். 1934 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட SIL, 89 நாடுகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, மேலும் 162 நாடுகளில் 1.07 பில்லியன் மக்களைக் பிரதிநிதிக்கும் சுமார் 1,660க்கும் மேற்பட்ட செயலில் உள்ள மொழித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
பதானி மலாய்-தாய்(Thai) பன்மொழி கல்வித் திட்டத்தின் ஆலோசகராக பெர்சன் முன்னோடிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த திட்டம், தாய்லாந்தின் கல்வி அமைச்சகம், மஹிடோல் பல்கலைக்கழகம் (Mahidol University) மற்றும் யுனிசெஃப் (Unicef) ஆகியவற்றுடன் ஒரு இணை பணியாக 2006இல் தொடங்கியது.
மரத்திலும் ஏற வேண்டும் என்று ஒரு மீனை தீர்ப்பளித்தால், அம்மீன் தான் ஒரு முட்டாள்தான் என்று நம்பி வாழும்
கட்டுப்பாட்டு பள்ளிகளுடன் (control schools) பைலட் பள்ளிகளை (pilot schools) பொருத்தும்போது – வேறுபாடுகள் தெளிவாக உள்ளன என்றும் நன்மைகள் பன்மடங்குகள் ஆகின்றன என்பதும் தெளிவாகின்றன.
இந்த திட்டத்தை மதிப்பிட்ட தாய் (Thai) அறிஞர்கள், இது தாய் மொழியின் உயர் தரத்தையும், பிற பாடங்களின் மேம்பட்ட கற்றலையும், மேம்பட்ட சோதனை மதிப்பெண்களையும், கற்றல் செயல்பாட்டில் மிகவும் வலுவான சமூக ஈடுபாட்டையும் தருகிறது என்பதைக் கண்டறிந்தனர்.
“ஒரு உயர்மட்ட கல்வி முறையை சுமத்துவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், சிறுபான்மை குழுக்கள் அவர்களும் அவர்களின் கலாச்சாரமும் மொழியும் பயனற்றவை என்ற பெரும்பான்மையினரின் பொய்யை நம்பத் தொடங்குகின்றனர்.
இங்கே ஒரு பழைய பழமொழி நடைமுறைக்கு வருகிறது – ஒரு மரத்தை ஏறும் திறனைக் கொண்டு ஒரு மீனை நீங்கள் தீர்ப்பளித்தால், அம்மீன் தான் ஒரு முட்டாள்தான் என்று நம்பி அதன் முழு வாழ்க்கையையும் வாழ்கிறது, என்று பெர்சன் கூறினார்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க ஒரு சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் தேவைப்படுகிறது என்பது உண்மைதான் என்றாலும், மில்லியன் கணக்கான குழந்தைகளை தேசிய மொழி மற்றும் / அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும்படி கட்டாயப்படுத்துவது பலரை அந்நியப்படுத்துவதாகவே அவர் கருதுகிறார்.
“தெற்கு தாய்லாந்தின் படானி மலாய் சமூகத்தில், 70 ஆண்டுகளுக்குப் பிறகு, தாய் (Thai) பள்ளிகளில் படித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு படிக்கவும் எழுதவும் முடியாது என்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். தலைமுறை தலைமுறையாக ஒரு நிரந்தர பிந்தங்கிய வர்கம் உருவாகியுள்ளது என்பதைக் காண்கிறோம்.
இந்த அதிக விகித கல்லாமை, மன அழுத்தம் மற்றும் அதிருப்த்தி உணர்வுகளுக்கு பங்களிக்கிறது, அநேகமாக, தென் தாய்லாந்து கிளர்ச்சிக்கு வித்திட்டு பல உயிர்களை இழக்க செய்துள்ளதும் கூட எனலாம். (2004 மற்றும் 2017க்கு இடையில் 6,000 முதல் -7,000 உயிர்கள் இழந்துள்ளன). இக்கிளர்ச்சியில் பல ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது (கடந்த ஆண்டு தாய்லாந்தின் “தி நேஷன்” வெளியிட்ட ஒரு கட்டுரையில் இந்த எண்ணிக்கை 184 என குறிப்பிட்டிருந்தது). ஆகவே, ஒருங்கிணைப்புக் கொள்கைகள் சரியாக செயல்படவில்லை என்பதற்கான தெளிவான அறிகுறியாகும் என்று நான் நினைக்கிறேன்,” என்று பெர்சன் கூறினார்.
1939 ஆம் ஆண்டில் தேசிய கலாச்சாரச் சட்டத்தின் கீழ், படானி மலாய்க்காரர்கள் குறிவைக்கப்பட்டு, 1947 ஆம் ஆண்டளவில், சுலோங் அப்துல் கதிர் அல்-ஃபதானி தன்னாட்சி, மொழி மற்றும் கலாச்சார உரிமைகள் மற்றும் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஒரு இயக்கத்தைத் தொடங்கினார் (அவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் 1954-இல் மர்மமான முறையில் காணாமல் போனார்).
அவர்களின் இந்த நிலைமை தனித்துவமானது அல்ல. உலகில் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 7,097 மொழிகளில், 2,464 மொழிகள் ஆபத்தான நிலையில் உள்ளன. அதே நேரத்தில் 23 மொழிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. அவை உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களால் பேசப்படுகின்றன. இதன் விளைவாக கிட்டத்தட்ட 40 சதவீத மாணவர்கள் தங்கள் கல்வியை அவர்கள் புரிந்து கொள்ளாத மொழியிலேயே தொடங்குகிறார்கள்.
வாழ்-பகுதிக்கு ஏற்றவாறு ஒரு திட்டம்.
அப்பகுதியில் உள்ள குழந்தைகள் இந்த “பரிசோதனை” கல்விக் கொள்கையின் மூலம் பயனடைய வேண்டும் என்று பெர்சன் உறுதியாக இருந்தார்.
“முதன்மை மொழி கல்வியின் ஆக்கப்பூர்வமான அம்சங்களைக் காண உங்களுக்கு பள்ளி சார்ந்த பாடத்திட்டம் கூட தேவையில்லை. பெரியவர்கள் கூட தங்கள் சொந்த மொழியில் கல்வியறிவு வகுப்புகள் செல்வதன் மூலம் பயனடைந்துள்ளனர்.”
இத்திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு, பெர்சன் ஒரு வருடத்திற்கும் மேலாக அதனைப்பற்றிய ஆராய்ச்சியை மெற்கொண்டுள்ளார்.
“மலாய் புத்தகங்கள் சக்திவாய்ந்தவைகளாக இருந்தாலும் கூட, அது வேலை செய்யாது என்பதை நாங்கள் கண்டறிந்தோம், மக்கள் அதை உண்மையில் பயன்படுத்தவில்லை. எனவே நாங்கள் ஒரு தாய் சார்ப்பு எழுத்துக்களை (Thai-based alphabet) உருவாக்கினோம்.
பெர்சன் குழுவினருக்கு இதுவும் கூட ஒரு சுலபமான வேலையாக அமையவில்லை ஏனெனில், பெற்றோர்களோ தாய் (Thai) கையெழுத்துப்படிவத்தை விரும்புகிறார்கள், மதத் தலைவர்களோ ஜாவியை ஆதரிக்கின்றனர், உலக சிந்தனையுடனும், பல நாடுகளுக்கு பயணம் செய்தவர்களோ லத்தீன் (ரூமி) எழுத்துமுறை சிறப்பாக செயல்படும் என்று கருதுகின்றனர்.
“எந்த ஒரு நாட்டிலும், அரசாங்கங்கள் மொழி பற்றிய முயற்சிகளை மிகவும் கவனமாக ஒருங்கிணைத்து, நடைமுறையில் இருக்கும் கொள்கைகளின் விளைவுகளை ஆய்வு செய்ய வேண்டும். அரசாங்கம் உண்மையிலேயே அதன் சிறுபான்மை மக்களுக்கு மரியாதை காட்டும்போது, அம்மக்கள் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் அனைத்து கூறுகளையும் உயர்த்த முயலுவார்கள்.
இருப்பினும், பெரும்பாலான பதானி மலாய் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தாய் (Thai) மிக முக்கியமான மொழி என்றும், ஆனால் அவர்கள் அதை பள்ளியில் சரியாக கற்கவில்லை என்றும் நினைக்கிறார்கள்.
“நாங்கள் அரசியல் உணர்வுகளை கண்காணிக்க மாட்டோம், ஆனால் நாங்கள் மேற்கொள்ளும் எங்கள் பைலட் பள்ளிகளை கட்டுப்பாட்டு பள்ளிகளுடன் ஒப்பிட்டு பார்க்கிறோம். பதானி மலாய் மொழியில் கற்கத் தொடங்கும் எங்கள் மாணவர்கள், 100 சதவீத தாய் (Thai) கற்பிக்கும் பள்ளிக்குச் செல்வோரை விட நன்றாகவே தாய் (Thai) மொழியைக் கற்றுக்கொள்ள முடிகிறது.
“எங்கள் பைலட் பள்ளியில், முதல் வகுப்பில் 250 மணி நேர தாய் (Thai) மொழி கற்பிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு பள்ளியில் 1,000 மணி நேரத்திற்கு மேல் போதிக்கப்படுகிறது. எனவே வெறும் மணி அளவுகோள் மட்டும் இங்கே முக்கியமல்ல.”
படிப்படியாக, சீர்படுத்தப்பட்ட முறையைப் பயன்படுத்துவதன் மூலம், பைலட் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு படிப்பவர்கள் தாய் Thai மொழியில் 80 சதவீதமும், பட்டானி மலாயில் 20 சதவீதமும் படிக்கும் ஒரு கட்டத்தை அடைந்து, சிறந்த தேர்சிகளை அடையலாம். ஒட்டுமொத்த சமூகமும் இந்த பணியில் ஈடுபடத் தொடங்கியது என்று பெர்சன் மேலும் கூறினார்.
இந்த திட்டத்தின் 30 சதவிகிதம், உள்ளூர் உள்ளடக்கமாக இருக்க வேண்டும் படியாக உருவாக்கியுள்ளோம். நாங்கள் வரலாற்றிலிருந்து தொடங்கி பின்னர் பாடத்திட்டத்தை உருவாக்க அதைப் பயன்படுத்தினோம். பின்னர் நாங்கள் சமூக உறுப்பினர்களையும் பட்டறைகளில் ஈடுபடுத்தத் தொடங்கினோம். உள்ளூர் பாடானி இசைக்கலைஞர்கள் மற்றும் கதைசொல்லும் நபர்களுடன் இணைந்து பணியாற்றி புதிய பாடல்களை நாங்கள் வடிவமைத்தோம். உள்ளூர் கவிதைகளின் இரண்டு தொகுப்புகளையும் நாங்கள் வெளியிட்டோம். இவை அனைத்தும் சமூக உறுப்பினர்களிடையே நம்பிக்கையையும் பெருமையையும் வளர்ப்பதில் முக்கியமாக அமைந்தது” என்றார்.
எழுத்துக்களை உருவாக்குதல்
1996ஆம் ஆண்டில், பதானி மலாய்களுடன் பணியாற்றுவதற்கு முன்பு, தாய்லாந்தில் பிசு (Bisu) என அழைக்கப்படும் ஒரு சிறிய பழங்குடியினருக்கு எழுத்துக்களை உருவாக்கிய தனிப்பட்ட அனுபவமும் பெர்சனுக்கு இருந்தது.
சீனா, மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்தில் வசிக்கும் சில ஆயிரம் பேர் கொண்ட ஒரு பெரிய குழுவின் ஒரு பகுதி தான் தாய் பிசு சமூகம் ஆகும். வெறும் 700 பேர் மட்டும் அடங்கிய அவர்கள், சியாங் ராயின் தென்மேற்கே 45 நிமிடங்கள் தூரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் வாழ்கின்றனர்.
“இது ஒரு பொதுவான SIL திட்டமாகும். பிசு மக்களுக்கு இதற்கு முன்பு ஒரு எழுத்து முறை இருந்தது இல்லை. ஆனால் அவர்கள் சுய விழிப்புணர்வுடன் இருந்தனர். தற்செயலாக கிராமத்தின் உதவித் தலைவர் டோங் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. டோங் வேறு கிராமத்துடன் வேறு இனத்தவருடன் வசித்து வந்தார், அவர் ஒரு சிறந்த பேச்சாளர். நான் செய்து வரும் வேலையைப் பார்த்த அவர், என்னையும் என் மனைவியையும் அவர்களுடன் இருந்து ஒரு எழுத்துக்களை உருவாக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். எனவே நாங்கள் தாய் (Thai) எழுத்துக்களை ஒரு தளமாகப் பயன்படுத்தினோம், ஆனால் பிசு மக்களுக்கு விசித்திரமான நாசி ஒலிகள் இருந்ததனால், அது கடினமாக இருந்தது.”
SIL 1,200க்கும் மேற்பட்ட மொழிகளுடன் செயல்படுகிறது; 70க்கும் மேற்பட்ட நாடுகளில் எழுத்துக்களை உருவாக்க உதவியும் உள்ளது.
“ஒரு வகையில் இது ஒரு பெரிய பொறுப்பு. ஆனால் நீங்கள் ஒரு மொழியியலாளராக இருந்தால் இது மிக உற்சாகமாக அமையும்” என்று பெர்சன் கூறினார். டெக்சாஸிலிருந்து வந்த அவருடைய மனைவியும் ஒரு மொழியியலாளர்.
மொழி என்பது மக்களின் அடையாளத்தின் ஆழமான ஒரு பகுதியாகும்
டோங் அவர்களுடைய சொந்த எழுத்து முறை மீண்டும் அவர்களின் அடையாளத்தை உருவாக்க உதவியது என்றார். “அவர்கள் அதை புதுப்பித்துள்ளனர்; இப்போது பிசு மொழியில் புதிய பாடல்களும் நடனங்களும் உள்ளன” என்று பெர்சன் கூறினார்.
அவர் தாய் (Thai) பிசுவிற்கான எழுத்துக்களை உருவாக்கிய பிறகு, சீன அறிஞர்கள் இந்த மொழி பரவலாக பேசப்படுவதைக் கண்டுபிடித்தனர். சீனாவில் 6,000, மியான்மரில் 700 மற்றும் வடக்கு லாவோஸில் 40,000 என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பாதிக்கப்படக்கூடிய மொழிகளைத் தொடர ஏன் போராட வேண்டும்?
“மொழி என்பது மக்களின் அடையாளத்தின் ஆழமான ஒரு பகுதியாகும். பாரம்பரியத்துடன் வாழ்ந்து பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் பின்தங்குவதா அல்லது இந்த பாரம்பரிய வேர்களைக் கைவிட்டு ஒரு பெரிய கலாச்சாரத்தில் ஒன்றிணைவதா என்ற ஒரு எண்ணப் போக்கு எப்பொழுதும் உள்ளது. இப்படி சிந்திக்க அவசியம் இல்லை, இது நாம் மேற்கொள்ளும் ஒரு தேர்வாக இருக்க வேண்டியதில்லை,” என்று பெர்சன் கூறினார்.
இது மலேசியாவில் சாத்தியமாகுமா?
இதுபோன்ற ஒரு அமைப்பின் கீழ் பல வேறுபட்ட கல்வி முறைகளை பராமரிப்பதற்கான குழப்பங்களும் செலவும் என்ன? எடுத்துக்காட்டாக, மலேசியாவில் மட்டும், தீபகற்பத்தில் உள்ள 18 ஒராங் அஸ்லி குழுக்களில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பள்ளிகள் அமைக்கப்பட வேண்டிய அவசியம் வருமா?
பெர்சனின் சக ஊழியர் டிம் பிலிப்ஸ் (கீழே) SIL மலேசியாவின் இயக்குனர் ஆவார். இவர் 2000 ஆண்டு முதல் இங்கு வசித்து வருகிறார்.
“ஒவ்வொரு தாய்மொழிக்கும் தனித்தனி பள்ளிகளைக் கொண்டிருப்பது எப்போதும் சாத்தியமில்லை. இங்கே, சபாவில் மட்டும் 40க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன, சரவாக்கிலும் 40க்கும் மேற்பட்டவை மற்றும் தீபகற்பத்தில் 20க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன,” என்று பிலிப்ஸ் கூறினார்.
“நாங்கள் இங்கு பிடாயு மொழிகள் மற்றும் கடாசன் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம். குறிப்பாக, தயக் பிடாயு தேசிய சங்கம் (Dayak Bidayuh National Association) போன்ற அமைப்பில் பணியாற்றுகிறோம். நாங்கள் எப்போதும் உள்ளூர் சமூகத்திடமிருந்து வரும் நம்பிக்கை அழைப்பின் மூலம் தான் உள்ளே செல்கிறோம்.”
சிறிய மொழியியல் குழுக்களுக்கு உண்மையில் பல சவால்கள் உள்ளன என்பதை பிலிப்ஸ் அங்கீகரிக்கிறார். ஆனால் மலேசியாவில் இருப்பவர்களுக்கு உற்சாகமும் புத்துணர்வும் இருக்கிறது என்று அவர் நம்புகிறார்.
“சிறிய குழுக்களுக்கு பல அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர்கள் குறைந்து கொண்டே போக முடியும், அதோடு அவர்கள் திருமணமாகி தங்கள் பாரம்பரிய நிலங்களை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள். நாளடைவில், யாரும் தங்கள் மொழிகளைப் பேசுவதில்லை.
“ஆனால் மலேசியாவின் ஒராங் அஸ்லி குழுக்கள் அவற்றின் அளவை காட்டிலும் வியக்கத்தக்க வகையில் உற்சாகமாக இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அவர்களின் சொற்களைக் கற்றுக்கொண்டால், அவர்கள் உங்களுடன் அந்த மொழியில் உரையாட விரும்புகிறார்கள்.”
உதாரணமாக பேராக் நகரைச் சேர்ந்த லானோ என்ற சிறிய குழுவை இதற்கு மேற்கோள் காட்டினார் பிலிப்ஸ். டெமியர் (மக்கள்) அவர்களுக்கு சில அழுத்தங்களைத் தருகிறார்கள், அவர்கள், சில நூற்றுக்கணக்கானோர் மட்டுமே உள்ளனர், ஆனால் அவர்கள் யார் என்பதில் மிகவும் பெருமையாகக் கருதுகிறார்கள். அவர்கள் தங்கள் மொழியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்,” என்றார்.
இதுபோன்ற கலாச்சாரங்கள், டிக்ளோசியாவின் நிகழ்வு இருந்தபோதிலும், அவை எப்படியும் தப்பிப் பிழைத்து தொடரும் என்று பிலிப்ஸ் கூறினார் (டிக்ளோசியா : அதாவது வேறொரு மொழியிலிருந்து தொழில்நுட்ப சொற்களை கடன் வாங்க வேண்டிய சூழல் – எ.கா. கார் அல்லது கணினி போன்ற தொழில்நுட்ப சொற்களைக் ஒருவரின் சொந்த மொழியில் இல்லை என்பதால் இந்த நிலை).
எண்ணங்கள் மற்றும் மனநிலையை மாற்ற, நிறைய வேலை செய்ய வேண்டும் என்று அவர் ஒப்புக்கொண்டார்.
“நிறைய ஆராய்ச்சிகள் எதிர் உள்ளுணர்வை அளித்துள்ளன. அதாவது இளைஞர்களுக்கு தேசிய மொழியை தொடர்ந்து கற்பித்தால் அது சிறப்பாக செயல்படும் என்று நினைக்கும் போது, அது அவ்வாறு செயல்படாமல் போகும். இதுதான் நாம் எதிர்கொள்ள வேண்டிய ஒன்றாக அமைகிறது. எல்லாவற்றிற்கும் பின்னால் அரசியலும் உள்ளது. எங்களைப் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கவனமாகவும் மென்மையாகவும் பணியாற்ற வேண்டும் – நாங்கள் விருந்தினர்கள், சேவை செய்ய விரும்புகிறோம்.”
ஆயினும்கூட, இந்த இருவருமே தங்கள் அசல் நாடுகளிலிருந்து உலகின் மறுபக்கத்தில் வாழ்வதற்கும் இந்த மொழியியல் திட்டங்களில் பணியாற்றுவதற்குமே ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார்கள்.
“நான் ஏமாற்றமடைந்த நேரங்களும் உள்ளன. ஆனால் என்னைத் தொடர்ந்து பணிபுரிய செய்வது என்னவென்றால், இந்த திட்டங்கள் நிச்சயமாக செயல்பட்டு வெற்றிபெரும் என்பதை நாங்கள் அறிவோம் என்பதே. நம்மிடம் ஒரு விஷயதிற்கு பதில் இருக்கிறது என்று தெரிந்தால், அது ஒரு கடினமான போராக இருந்தாலும், அங்கே வெறுமனே உட்கார்ந்து கொண்டு எதுவும் செய்யாமல் இருக்க முடியாது. அப்படியிருந்தால் அது ஒரு பொறுப்பற்ற செயலாகவே இருக்கும்” என்று பிலிப்ஸ் கூறினார்.