`இலங்கையின் புலனாய்வுத் தலைமை அதிகாரியாக இஸ்லாமியரா?`: சரத் பொன்சேகா ஆட்சேபம்

உலகுக்கும், இலங்கைக்கும் பாரிய அச்சுறுத்தலை முஸ்லிம் பயங்கரவாதம் ஏற்படுத்தியுள்ள பின்னணியில், அரச புலனாய்வு தலைமை அதிகாரியாக முஸ்லிம் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளமை பாரிய பிரச்சினை என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், உள்நாட்டுப் போர்க் காலத்தின் இறுதிக் காலத்தில் ராணுவத் தளபதியாக இருந்தவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் தமிழ் பயங்கரவாதம் நிலவிய காலப் பகுதியில் தமிழ் புலனாய்வு அதிகாரியொருவரை நியமித்திருந்தால் தமிழ் பயங்கரவாதத்தை இல்லாதொழித்திருக்க முடியுமா என அவர் இதன் போது கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய புலனாய்வு பிரிவிற்கும், அரச புலனாய்வு பிரிவிற்கும் தனக்கு நெருக்கமான அதிகாரிகளையே ஜனாதிபதி நியமித்துள்ளதாக சரத் பொன்சேகா குற்றச்சாட்டினார்.

இலங்கையில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லாத பின்னணியில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஒருவரே செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் அமைச்சரவை ஒன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இடம்பிடிக்காமை பாரிய பிரச்சினை என சரத் பொன்சேகா கூறுகின்றார்.

இந்த நிலையில், இன்று வீரர்களை போன்றும், பௌத்தர்களை போன்றும் பேசுபவர்கள், பிரபாகரன் இருந்த காலப் பகுதியில் வெளியில் கூட வரவில்லை என அவர் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதாக கூறும் ஜனாதிபதி, பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி வருவதாக சரத் பொன்சேகா கூறினார்.

இவ்வாறு பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டுமாயின், முதலில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், புலனாய்வுத்துறைக்கு தகுதியானவர்களை நியமிப்பதாக கூறி இருவரை ஜனாதிபதி நியமித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இவ்வாறு நியமிக்கப்பட்ட இருவரும் குறித்த பொறுப்புக்கு தகுதியில்லாதவர்கள் என சரத் பொன்சேகா கூறினார்.

இவ்வாறு புலனாய்வு பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்ட இரண்டு பேரும் ஜனாதிபதிக்கு நெருக்கமான நபர்கள் என்ற காரணத்திற்காக மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் பயங்கரவாதம் காணப்பட்ட காலப் பகுதியில், தமிழ் புலனாய்வு அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், முஸ்லிம் அதிகாரியொருவர் அரச புலனாய்வு பிரிவிற்கு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமையினால், அவரால் முஸ்லிம் பயங்கரவாத செயற்பாட்டிற்கு எதிராக செயற்பட முடியாது என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

பொறுப்பான அதிகாரிகளை சரியான பதவிகளுக்கு அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் என ஒன்று இல்லை – ரிஷாட் பதியூதீன்

”இஸ்லாமிய அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம்” என நிரந்தரமாக முத்திரை குத்தப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற ஒன்று கிடையாது எனவும், இஸ்லாமிய மார்க்கம் அடிப்படைவாதத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவனோ ஒருவன் செய்த குற்றத்துக்காக இஸ்லாமியர்களை குற்றம் சொல்வது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த குற்றத்தை செய்தவர்களை தாம் முழுமையாக காட்டிக்கொடுத்துள்ளதாகவும், அவர்களை முழுமையாக இல்லாதொழிக்க தாம் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலனாய்வுப் பிரிவிற்கு தலைமை அதிகாரியாக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை தவறு என்ற விதத்தில் சரத் பொன்சேகா கருத்தை வெளியிட்டதை ரிஷாட் பதியூதீன் இதன்போது நினைவூட்டினார்.

சஹ்ரான் என்ற ஒரு நபர் செய்த குற்றத்திற்காக, நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கேவலப்படுத்துவது கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் நிலவுகின்ற இவ்வாறான சிந்தனைகளை மாற்றியமைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

நாடு பிளவுப்படக்கூடாது எனவும், பயங்கரவாதம் தலைத்தூக்க கூடாது எனவும், நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.