கொரோனா வைரஸ்: 24 மணி நேர செய்தி தொகுப்பு

கொரோனா வைரஸ் தொடர்பாகக் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த செய்தி தொகுப்பு:

 கொரோனா வைரஸால் சீனாவில் 106 பேர் பலியாகி உள்ளனர். நேற்றைய மாலை நிலவரப்படி 4,515 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த வைரஸ் பரவலின் மையப்புள்ளியாக கருதப்படும் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. அந்த ஊருக்கு செல்வது, அந்த ஊரிலிருந்து வெளியூருக்கு பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் அல்லது முன்பே மூச்சு திணறல் பிரச்சனை உள்ளவர்கள்.

 பலியான 106 பேரில் 100 பேர் ஹூபே மாகாணத்தை சேர்ந்தவர்கள். அந்த மாகாணத்தில் மட்டும் 2,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 1.1 கோடி.

 சீனாவுக்கு அடுத்ததாக அதிகபட்சமாக தாய்லாந்தில்தான் 8 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் 5 பேரும், மலேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 4 பேரும், பிரான்சில் 3 பேரும், வியாட்நாமில் இருவரும், நேபாளம், கனடா, கம்போடியா, இலங்கை, ஜெர்மனி ஆகிய நாடுகளில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே விசா தரும் முறையை ரத்து செய்துள்ளது இலங்கை.

 சீனாவின் வுஹான் மற்றும் ஹூபேய் பகுதிகளில் இருந்து வரும் சீனக் குடிமக்கள் மலேசியாவில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 கொரோனா வைரஸில் தாக்கம் பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. அமெரிக்கா மற்றும் லண்டன் பங்கு சந்தைகள் இறங்கு முகத்தைக் கண்டன.

bbc.com/tamil