பீஜிங் : வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரசால் புதிதாக 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து தான் இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வுஹான் நகருக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பஸ், ரயில், விமானம் என அனைத்து போக்குவரத்துக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1,300 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சீன அரசு தெரிவித்துள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
விசா ரத்து
கடந்த 25 ல், சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்த 40 வயது பெண் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவ சோதனையில் கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, சீனாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசா தரும் நடைமுறையை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது.