அமைச்சரை பாதுகாக்கும் காவல்துறை எங்கே?

வெள்ளிக்கிழமை இரவு பெர்சத்து இரவு விருந்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லாததாக காரணத்தால், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் ஒரு வேலியின் வழி குதித்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகச் சொன்னார் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.

இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவரது பாதுகாப்பு எங்கே? அவரது பாதுகாப்புக்கு யார் பொருப்பு? அவர் ஏன் உயிருக்கு பயந்து ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது? மேலும் முக்கியமாக, காவல்துறை எங்கே இருந்தது? என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார் சார்ல்ஸ்.

“இந்த அச்சுறுத்தலுக்கு காரணம் என்று நம்பப்படும் இரண்டு பேரை அவர்கள் கைது செய்துள்ளனர் என்பதை அறிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, ஆனால் அது போதாது” என்று அவர் வலியுறுத்தினார்.

சுமார் 200 பேர் கொண்ட குழு சம்பந்தப்பட்டதாக சைட் சாடிக் கூறும் இந்த சம்பவம், காவல்துறை, ஒரு அமைச்சரைப் பாதுகாக்கத் தவறியதாகக் கூறப்படும் பெரிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகிறதா என்று சார்லஸ் மேலும் கேள்வி எழுப்பினார்.

“எனவே, இந்த சம்பவத்தின் பின்னால் இருப்பவர்களை கைது செய்வது வெறுமனே போதாது”, என்றார்.

“இந்த சம்பவத்தை மிகத் துல்லியமாகத் திட்டமிட்டவர்களை போலீஸ் முழுமையாக விசாரிக்க வேண்டும். அமைச்சர் தப்பிக்கவில்லை என்றால் அது முற்றிலும் வேறுவிதமாக நடந்திருக்கலாம்” என்று அவர் கூறினார். போலீஸ் விசாரணையின் முடிவை வெளிப்படுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்துல் ஹமீட் படோரை வலியுறுத்தினார், சார்லஸ்.
பெர்சத்து இளைஞர் தலைவரான சைட் சடிக் மற்றும் அவரது பெற்றோர் உலு திராமில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த பெர்சத்து கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது சுமார் 200 பேர் கொண்ட குழு தங்கள் மேசையை சுற்றி வளைத்தபோது இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மானும் அவரது பெற்றோரும் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“அவர்கள் எங்கள் சாப்பாட்டுப் பகுதியைச் சுற்றி சூழ்ந்துகொண்டு நின்று கூச்சலிடவும் தொடங்கினர். மற்ற விருந்தினர்கள் அனைவரையும் தொந்தரவு செய்தனர். அவர்கள் கூச்சலிட்டு, எல்லா விதமான கடுமையான வார்த்தைகளையும் உபயோகித்தனர். நேற்று எனது பெற்றோரும் சாட்சிகளாக இருந்தனர். என்ன இது? விழாவில் சிறிய குழந்தைகள், பெண்கள் எல்லோரும் இருந்தனர்,” என்று அவர் ஒரு பேஸ்புக் பதிவில் குற்றம் சாட்டினார்.

சையிட்டை மாநிலத்தை விட்டு வெளியேறுமாறும் கத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோக்கள் ஆன்லைனில் பரப்பப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் அம்னோ குழு தொடர்புடையது என சைட் சடிக் தனது தனிப்பட்ட சந்தேகங்களை எழுப்பியுள்ளார். ஆனால், இதை அம்னோ தலைவர்களும் அதன் இளைஞர் தலைவர் அசிராஃப் வாஜ்தி டுசுகி உட்பட மறுத்துள்ளனர்.