குப்பை மேட்டு குடிவாசிகளுக்கு வேலை வாய்ப்பு, அடிப்படைவசதி – அமைச்சர் பரிந்துரை

குப்பை மேட்டு குடிவாசிகளுக்கு வேலை வாய்ப்பு, அடிப்படைவசதி – அமைச்சர் பரிந்துரை

பகாங், ரோம்பினில் உள்ள ஒரு குப்பைமேட்டருகில் உள்ள ஒராங் அஸ்லி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு உதவ பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி பல நடவடிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இன்று கிராமவாசிகளைச் சந்தித்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய வேதமூர்த்தி, கிராமவாசிகளின் முக்கிய கோரிக்கையானது அவர்களின் குடியிருப்பு பகுதி பராமரிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

உள்ளூர் மாவட்ட அதிகாரியிடம் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

“அவர்களின் உரிமை கோரலில் பாதிப்போ, அத்துமீறலோ இல்லையென்றால், நிலத்தை ஒராங் அஸ்லி குடியேற்றமாக வர்த்தமானி செய்ய ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை (Jakoa) விண்ணப்பிக்கும். அதன் பின் நில கணக்கெடுப்பு பணிகளைத் தொடங்கலாம்,” என்று அவர் கூறினார்.

நிரந்தர நீர் வசதி செய்யப்படும் வரை Jakoa வாரந்தோறும் கிராம மக்களுக்கு தற்காலிகமாக சுத்தமான தண்ணீரை வழங்கும் என்று அவர் கூறினார்.

சூரிய மின்சாரம் உட்பட 22 ஒராங் அஸ்லி வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதற்கான வழிகளைக் கண்டறிய பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

SWCorp’s குப்பைமேட்டில் இருந்து மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சேகரிப்பதற்கு பதிலாக மாற்று வருமானத்தை வழங்க, கிராமவாசிகளை அங்கே பணியமர்த்துவதற்கான சாத்தியத்தை ஆராயுமாறு அந்நிறுவனத்திடம் கேட்டுள்ளதாக வேதமூர்த்தி கூறினார்.

அந்த இடத்தில் குப்பைகளை எடுக்கும் ஒராங் அஸ்லி ஒரு மாதத்திற்கு RM400 முதல் RM500 வரை சம்பாதிக்கிறார். இது ஒரு எல்லைக்குட்பட்ட இடம்; வேலை செய்ய ஆபத்தான பகுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்மொழியப்பட்ட யோசனைகளில் உரமிடும் திட்டம் அல்லது மீன் குளங்களில் மீன்களை வளர்ப்பது போன்ற திட்டங்களும் அடங்கும்.

“இந்த திட்டங்களுக்கான செலவு வேறுபட்டதாக இருக்கும். 22 குடும்பங்களுக்கு, செலவு RM200,000 முதல் RM500,000 வரை இருக்கலாம். என்ன செலவாக இருந்தாலும், அரசாங்கம் அதற்கு உதவுவதோடு அதை ஏற்றுக் கொள்ளும்” என்று அவர் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை மலாய் மெயில் நாளிதழ் கிராமவாசிகளின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது, அதில் ஒராங் அஸ்லி குழந்தைகள் குப்பைக் குவியல்களை அகற்றி பொருள்களைத் தேடும் புகைப்படமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஓடும் நீர், சுகாதாரம் இல்லாவிட்டாலும் ஓராங் அஸ்லி மக்கள் அங்கு வசிக்கத் தெரிவுசெய்ததாகக் கூறப்படுகிறது. அங்கு அவர்கள் குப்பைப்பொருக்குதல் மூலம் ஒரு மாதத்திற்கு RM700 வரை சம்பாதிக்க முடியும் எனும் காரணத்தால் அங்கே வாழ்கின்றனர். “Rancangan Pengumpulan Semula” திட்டத்தின் கீழ் புதிய கிராமங்களில் அவர்களை மீளக்குடியமர்த்தும் முந்தைய முயற்சிகளை அவர்கள் நிராகரித்துவிட்டனர்.

சுமார் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஆறு வெவ்வேறு கிராமங்களிலிருந்து இங்கு குடியேறியவர்கள், இந்த குப்பைமேட்டு கிராமத்தை நிறுவியதாக வேதமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறினார். அதன் மக்கள் தொகை இப்போது 82 நபர்களாக வளர்ந்துள்ளது.