வன்னியின் உண்மை நிலை : அல் ஜசீரா ஊடகம்

இலங்கையின் தசாப்தகால உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள காயங்கள் இன்னமும் மாறாமல் உள்ளதாகவும் அந்தக் காயங்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அனைத்துலக செய்தி ஊடகமான அல் ஜசீரா குற்றம் சாட்டியுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவுக்குச் சென்ற அல் ஜசீரா செய்தியாளர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

“முப்பது வருடகால உள்நாட்டு போர் மக்கள் மனங்களில் கடும்காயங்களை ஏற்படுத்தியுள்ளது. கொடுரமான சம்பவங்களால் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் அவர்கள் மனங்களில் இருக்கின்றன.

வன்னியில் புதிய வீதிகள் அமைக்கப்படுகின்றன. புதிய கட்டிடங்கள் உருவாகின்றன. கடந்த காலங்களை நினைவுபடுத்தும் கட்டிடங்கள் அழிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள வடுக்களை அகற்ற எந்த நடவடிக்கைகளும் இல்லை. உளக்காயங்கள் அப்படியே இருக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்களின் உளக்காயங்களை ஆற்றுவது குறித்து இலங்கை அரசு சிந்திக்கவில்லை. அப்பகுதியில் மிகக்குறைந்தளவு உளநல சிகிச்சையாளர்களேயுள்ளனர். பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றிற்க்கு அப்பால் உளவியல் ரீதியான ஆற்றுகைப்படுத்தல் முக்கியமானது. இலங்கை அரசு இதனைச் செய்யவில்லை. சில இடங்களில் செய்யவிடாமல் தடுக்கின்றது என அரசசார்பற்ற அமைப்புகள் குற்றம் சாட்டின.

தமிழ்ப்பெண்கள் தம்மீதான பாலியல் வன்முறைகள் குறித்து பேசுவதற்கு தயங்குவது வழமை ஆனாலும் சிங்கள இராணுவத்தினரால் பெருமளவு வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன.

கண்ணுக்குத் தெரியாத இடத்தில் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது கணவரைச் சந்திப்பதற்க்காக தன்னை இராணுவச் சிப்பாய் ஒருவர் விலைபேசியதாக தமிழ்ப்பெண்ணொருவர் எம்மிடம் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் சந்திப்பதற்காக தன்னிடம் ஒரு முறை உறவு வைத்துக் கொள்ளுமாறு சிங்கள இராணுவச் சிப்பாய் கேட்டதாக அவர் குறிப்பிட்டார். அப்பகுதியில் பாலியல் ரீதியான வன்முறையும் தாக்குதலும் சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றது. மூன்றில் இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

அரசாங்க செயலர் இமெல்டா சுகுமார் தனக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஆனால் இராணுவத்திற்கெதிராக ஒரு முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஆனால், அல் ஜசீராவை சந்தித்த தமிழ்ப் பெண்கள் படையினராலேயே தாங்கள் அதிகம் இவ்வாறான துன்புறுத்தல்களுக்குள்ளாவதாக குறிப்பிட்டனர்.

குறிப்பாக விதவைகள் நிலைமை மிக ஆபத்தானதாகவுள்ளது. இரவில் தமது வீடுகளில் தங்குவதற்க்கு மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர்” இவ்வாறு அல் ஜசீரா செய்தியாளர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.