ஐ.நா மனித உரிமை பேரவைக்கு ஸ்ரீலங்காவின் உடனடி அறிவிப்பு!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இருந்து உடன்டியாக வெளியேறுவது தொடர்பில் பேரவைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான தூதுவர்களின் தலைவருக்கு, தமது நாட்டின் தீர்மானம் குறித்து ஸ்ரீலங்கா வெளிவிவகார செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஸ்ரீலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான 40 இன் கீழ் ஒன்று தீர்மானத்தில் இருந்து ஸ்ரீலங்கா வெளியேறுவது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான தூதுவர்களின் தலைவர் எலிசபெத் ரிச்சி பிசில்பேஜியருக்கு, ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

40 கீழ் ஒன்று தீர்மானத்திற்கு அடிப்படையாக இருந்த 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 34 இன் கீழ் ஒன்று மற்றும் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30 இன் கீழ் ஒன்று தீர்மானங்களில் இருந்து ஸ்ரீலங்கா வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார்.

தீர்மானத்தில் இருந்து வெளியேறுவத தொடர்பில் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதையும் பிசில்பேஜியருக்கு, ரவிநாத் ஆரியசிங்க எடுத்துக்கூறியுள்ளார்.

இது தொடர்பான தீர்மானம் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

43 ஆவது மனித உரிமைகள் பேரவை அமர்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஸ்ரீலங்கா பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் எனவும் ரவிநாத் ஆரியசிங்க அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 26 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறும் உயர்மட்ட அமர்வில் உரையாற்றும் போது அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஐ.நா தீர்மானத்தில் இருந்து வெளியேறும் அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்சலெட்டை சந்தித்து, ஸ்ரீலங்கா தொடர்பிலான புதிய விடயங்கள் குறித்து வாய்மூல பதில்களையும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன வழங்குவார் என குறிப்பிடப்பட்டுள்ளது

ibctamil