இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது, ரசிகர்கள் மீது பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஹம்பாந்தோட்டை – சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டிகளுக்காக நுழைவு சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பெருந்திரளான ரசிகர்கள் ஒன்று திரண்டிருந்த நிலையில், நுழைவு சீட்டுக்களை வழங்குவதற்கான அதிகாரிகள் குறைவாகவே இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுழைவு சீட்டுக்களை விரைவில் விநியோகிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், உரிய முறையில் நுழைவு சீட்டுக்கள் விநியோகிக்க தவறியதை அடுத்தே மைதானத்தின் நுழைவாயிலுக்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும், அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாததை அடுத்து போலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் ரசிகர்கள் மீது தடியடி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து ரசிகர்கள் கூச்சலிட்ட வண்ணம் மைதானத்திற்கு வெளியே ஓடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
“மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். மக்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்த யாருக்கும் அதிகாரம் கிடையாது” என தாக்குதலுக்கு உள்ளான ரசிகர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். .
“அதிகாரிகள் யாரும் இருக்கவில்லை. மக்கள் கூட்டத்தை வேண்டுமென்றே நிறுத்தி வைத்துள்ளனர். நாங்கள் பணம் செலுத்தி வருகின்றோம்” என மற்றுமொரு ரசிக கருத்து தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ஷ கண்டனம்
சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது, ரசிகர்கள் மீது பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்தியமையை வன்மையை கண்டிப்பதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்தி, மீண்டுமொரு முறை இவ்வாறான அசம்பாவிதம் இடம்பெறாதிருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நேற்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 161 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இலங்கை ரசிகர்கள் மீது பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்திய சம்பவமானது கவலைக்குரிய விடயம் என ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் போட்டி மத்தியஸ்தர் நல்லையா தேவராஜன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.ஹம்பாந்தோட்டை மைதானத்தில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டியொன்று நடைபெற்றமையினால், ரசிகர்கள் பல எதிர்பார்ப்புக்களுடன் வருகைத் தந்திருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.இந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இல்லாது போனதாகவும் நல்லையா தேவராஜன் கூறினார்.
சூரியவெவ ஸ்டேடியத்தின் நுழைவாயிலில் பார்வையாளர்கள் மீதான தாக்குதல் குறித்து இலங்கை கிரிக்கெட் அணி விசாரிக்க வேண்டும் என விளையாட்டுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
bbc