“கொரோனா சிறப்பு மருத்துவமனை வேண்டாம்” – கொழும்பு மக்கள் போராடுவது ஏன்?

கொழும்பு புறநகர் பகுதியான வத்தளை பகுதியிலுள்ள தொற்று நோய் வைத்தியசாலையொன்றை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையமாக மாற்றும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த நான்கு தினங்களாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வத்தளை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையமொன்று அமைக்கப்படுகின்றமையினால், தாம் பல்வேறு சுகாதார அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வத்தளை நகரில் மாத்திரமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அந்த மத்திய நிலையங்களை அமைப்பதற்கான இடங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது மக்களின் உயிரை பாதுகாப்பதற்காகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இந்த பகுதி மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதாக பகுதி என்பதனால், குறித்த இடத்தில் தொற்று நோய் ஆய்வு நிலையத்தை அமைப்பது சிறந்ததாக அமையாது என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு குறித்த தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையத்தை கொண்டு செல்லுமாறு கோருவதாக அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையமொன்றை அமைக்க இடமளிக்க போவதில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைத் தந்த அவர், மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து பதிலொன்றை வழங்குவதாக சுகாதார அமைச்சர் தனக்கு உறுதியளித்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா கூறினார்.

இதேவேளை, குறித்த பகுதியில் தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையம் அமைக்கப்படுவதனால் எந்த வித பிரச்சினைகளும் ஏற்படாது என சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

bbc