கொரோனா வைரஸ்: இலங்கையில் முதல் மரணம் பதிவானது

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவரே கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு அங்கொடை ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ள குறித்த நபருக்கு நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தை மேற்கோள்காட்டி அரசாங்கம் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 113 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் புதிதாக 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் இதுவரை சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 119 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, சுவிட்சர்லாந்தில் வசித்த இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்திருந்தார்.

கடந்த 25ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BBC