கொரோனா அச்சுறுத்தலிலும் ஆதாயம் தேடும் ராஜபக்‌ஷக்கள்

உயிரிழப்பு ஏதுமின்றி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை இலங்கை கடந்துவிடும் என்ற நம்பிக்கை, நாட்டு மக்களிடம் பரவலாகக் காணப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்திருக்கின்றது.

இதுவரை இரண்டு பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்திருக்கிறார்கள். அந்த இருவரின் உடல்நிலையில் ஏற்கெனவே காணப்பட்ட சிக்கல்கள் குறித்து வைத்தியத்துறையினர் விளக்கமளித்து, கொரோனா மரணங்கள் தொடர்பிலான மக்களின் பயத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றோடு அல்லாடும் மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இலங்கை முன்னேற்றகரமான கட்டத்தில் இருப்பதான எண்ணம் இன்னமும் இருக்கின்றது. அதனைத் தக்கவைப்பதற்கான போராட்டமே தற்போது நீடித்து வருகின்றது.

பொதுத் தேர்தலொன்றுக்காக பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்த நிலையிலேயே, நாடு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டி வந்தது. வேட்புமனுக்கள் கோரல் நிறைவுற்றதும், நாடு எதிர்கொண்டிருக்கின்ற அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, தேர்தலை ஒத்தி வைப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.   தேர்தலொன்றை எதிர்கொள்வதைக் காட்டிலும் கொரோனா போன்றதோர் அவசர நிலையை முன்னிறுத்திச் செயற்படுவதே அவசியமானது என்கிற குரல்கள் எழுந்தன.

அதன்போக்கில், நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில், ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்று, நாடாளுமன்றச் செயற்பாடுகளை மீள நிறுவுமாறும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியொன்றுக்காக காத்திருக்கும் ராஜபக்‌ஷக்கள், அந்தக் கோரிக்கைகளைக் கருத்தில் எடுக்கவேயில்லை.

மாறாக, வேட்புமனுக்களைக் கோரிய பின்னர், தேர்தல் ஒத்திவைப்பு என்கிற கட்டத்துக்குச் செல்வதிலேயே குறியாக இருந்தார்கள். அதுதான், தங்களுக்கான அரசியல் நலன்களை அதிகப்படுத்தும் என்று நம்பினார்கள்.

ஏனெனில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக உடைந்திருக்கின்ற நிலையில், தேர்தலில் அதன் மூலம் பலனடைய முடியும். ஒருவேளை, வேட்புமனுக் கோரல் நினைவுபெறாமல், நாடாளுமன்றத்தை மீள நிறுவி, தேர்தலை ஒத்திவைத்தால், பிரித்திருக்கின்ற ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஒன்றிணைவதற்கான காலமாக அது அமைந்துவிடும் என்கிற பயம் ராஜபக்‌ஷக்களிடம் காணப்பட்டது.

அதுதான், எரிவதில் பிடுங்குவது வரை, இலாபம் என்கிற கட்டத்தை நோக்கி ராஜபக்‌ஷக்கள் செயற்பாட்டார்கள். அதுதான், வேட்புமனுக் கோரலுக்குப் பின்னரான, தேர்தல் ஒத்திவைப்பு என்கிற நாடகத்தின் அடிப்படை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியை, ராஜபக்‌ஷக்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் சுவீகரித்துக் கொண்டார்கள். போர் முனையில் மாண்டவர்கள், அவர்களின் குடும்பங்கள் தொடங்கி, இராணுவம் உள்ளிட்ட படைத்துறையின் எந்தக் கட்டுமானத்தோடும் போர் வெற்றியைப் பகிர்ந்து கொள்வதற்கு ராஜபக்‌ஷக்கள் தயாராக இருந்திருக்கவில்லை.

அதை, அவர்கள் கடும் நிலைப்பாட்டோடு முன்னெடுத்தார்கள். பிரிவினையொன்றை முறியடித்து, நாட்டைக் காப்பாற்றியவர்களாக ராஜபக்‌ஷக்களே நிலைபெற வேண்டும் என்பதும், அதுதான், ஆட்சி அதிகாரத்துக்கான வழியென்றும் அவர்கள் நம்பினார்கள். அதனை, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் தென்னிலங்கை பூராகவும் பிரசாரப்படுத்தி வெற்றிகொண்டார்கள்.

அப்படியான நிலையொன்றைக் கொரோனா விடயத்திலும் கையாளவே ராஜபக்‌ஷக்கள் நினைக்கிறார்கள். சீனா, அமெரிக்கா தொடங்கி, உலக வல்லரசுகள் எல்லாமும் கொரோனாவால் ஆட்டம் கண்டிருக்கின்ற போது, அந்த அச்சுறுத்தலை ராஜபக்‌ஷக்கள் வெற்றிகரமாகக் கையாண்டார்கள் என்கிற பெயருக்காக, அவர்கள் இயங்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவையும்விட, கொரோனாத் தொற்று என்பது, இலகுவாக முறியடித்துவிட முடியாத அச்சுறுத்தலாக வளர்ந்து வருகின்றது. அப்படியான நிலையில், அதை எதிர்கொள்வதற்கு ஒரு தரப்பினரின் செயற்பாடுகள் மாத்திரம் போதுமானதில்லை. அங்குதான், கூட்டுப்பொறுப்பும், கூட்டுச் செயற்பாடுகளும் அவசியமாகின்றன.

கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பில், சுகாதாரத் துறையினரின் சேவை அளப்பரியது. அவர்களின் முன்னெச்சரிக்கை உள்ளிட்ட கோரிக்கைகள் கோட்டாபய ராஜபக்‌ஷவால் ஆரம்பத்தில் முறையாக உள்வாங்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றுக்காவிகள் அதிகமாக உள்வந்து, வெளியேறிய விமான நிலையத்தை மூடிவிடுமாறு வைத்தியர்கள் ஆரம்பத்திலிருந்து கோரினார்கள். ஆனால், கடந்த 18ஆம் திகதியே விமான நிலையங்கள் மூடப்பட்டன. அந்தக் கட்டத்திலேயே, கொரோனா வைரஸ் தொற்றோடு அநேகர் நாட்டுக்குள் வந்துவிட்டார்கள்.

இன்றைக்கு, கொரோனா வைரஸ் தொற்றோடு இனம் காணப்பட்டவர்களைவிட, ஐந்து மடங்குக்கும் அதிகமானவர்கள் மக்களோடு மக்களாகக் கலந்திருப்பார்கள் என்று இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் கூறுகிறார்.

அப்படியான கட்டத்தில், அவர்களை இனங்காணுவது முதல், அவர்கள் தொற்றுக்காவிகளாக மாறாது கட்டுப்படுத்துவது வரையிலான செயற்பாடுகள் என்பது, சுகாதாரத்துறையினராலும், முப்படையினராலும் மாத்திரம் நடத்தக்கூடிய காரியமல்ல. மாறாக, நிர்வாகத்துறையினரும், தன்னார்வலர்களினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.

நாடு அவசர நிலையொன்றை எதிர்கொண்டிருக்கின்றபோது, நாடாளுமன்றத்தைக் கூட்டி, பல்வேறு மட்டக்கருத்துகளையும் உள்வாங்கிச் செயற்பட வேண்டிய கடப்பாடு என்பது, ஜனாதிபதியினதும், காபந்து அரசாங்கத்தினதும் கடமை. அங்கு சுயநல அரசியலை முன்னிறுத்திக் கொண்டு செயற்பட ராஜபக்‌ஷக்கள் எத்தனிப்பதானது பாரிய சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றது. நாடு ஊரடங்கு என்கிற கட்டத்தை எதிர்கொண்டு, இரண்டாவது வாரத்தைக் கடக்கப் போகின்றது.

நாளாந்தம் வேலைக்குப் போனாலே, அடுத்தநாள் உணவு என்கிற கட்டத்தில் இலட்சக்கணக்கான குடும்பங்கள் வாழும் நாடு இது. அப்படியான நிலையில், வாரக்கணக்கான ஊரடங்கை அவர்கள் எதிர்கொள்வது என்பது, பெரும் சிக்கலானது. அது, நோய்த் தொற்று என்கிற அச்சுறுத்தலைப் புறந்தள்ளும் அளவுக்கான பசி என்கிற கோரத்தை அவர்கள் முன்னால் நிறுத்தும். அப்போது, அவர்கள் அச்சுறுத்தல்களைப் புறந்தள்ளி நடக்கத் தலைப்படுவார்கள். உணவைப் பெருமெடுப்பில் கொள்வனவு செய்து, பதுக்கி வைத்துவிட்டு, “ஐயோ ஐஸ்கிரீம் வாங்க முடியவில்லை” என்று கவலைப்படும் மேற்றட்டு மக்களை மாத்திரம் கருத்தில் கொண்டு, ஓர் அரசாங்கமோ, தலைமைத்துவமோ இயங்க முடியாது. ஆனால், அப்படியானதொரு கட்டத்தை நோக்கியே ராஜபக்‌ஷக்கள் இயங்குவதாகத் தெரிகின்றது.

நாளாந்தம் ஊடகங்களில் பத்து ரூபாய்க்கு முட்டை, 100 ரூபாய்க்கு ரின் மீன் என்கிற அறிவித்தல்களை வெளியிட்டு, மக்களின் பசியைப் போக்கிவிடலாம் என்று ராஜபக்‌ஷக்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், ஊடக அறிவிப்புகளுக்கு அப்பாலான நிதர்சனம் என்பது, அபத்தமானது. அப்படியான நிலையில், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் தொடங்கி அனைத்துக் கட்டங்களிலும் உள்ளவர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி, நிர்வாகக் கட்டமைப்பை முழுமையாகச் செயற்படுத்தி மக்களைக் காப்பாற்றியாக வேண்டும்.

மாறாக, போரை ராஜபக்‌ஷக்களே வெற்றி கொண்டார்கள் என்கிற நிலையைப் பேணுவது போல, கொரோனாவையும் ராஜபக்‌ஷக்களே வென்றார்கள் என்கிற பெயருக்காக, மக்களை இன்னும் இன்னும் அச்சுறுத்தலுக்குள் தள்ளக் கூடாது.

ஆனால், ராஜபக்‌ஷக்கள் அதனையெல்லாம் உணர்வது மாதிரியே தெரியவில்லை. மாறாக, மிருசுவில் படுகொலைக் குற்றவாளியான இராணுவ வீரருக்குப் பொது மன்னிப்பளித்து தென்னிலங்கையில் வாக்குகளைக் கைப்பற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

போர் வெற்றிவாதத்தைத் தக்க வைத்து சிங்கள பௌத்த தேசியவாதத்தின் காவலர்களாக ராஜபக்‌ஷக்கள் தங்களை நிலைநிறுத்தியது போல, கொரோனாவை வெற்றி கொண்டு, தங்களைக் கடவுள் நிலைக்கு நகர்த்தும் திட்டத்தோடு இயங்குகிறார்கள்.  ஆனால், அது அபத்தமான சிந்தனை. அது, மக்களை மரணக்குழியில் நிறுத்தி விளையாடும் விளையாட்டு.

-புருஜோத்தமன் தங்கமயில்

tamilmirror