கொரோனா வைரஸ் என பொதுவாக அனைவராலும் அழைக்கப்படும் ‘கொவிட்-19’ என்ற புதிய நோய், இனம், மதம், சாதி, அரசியல் கட்சி வேறுபாடுகளைப் பாராமல், நாடுகளில் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், முழு உலகையும் பற்றிப் படர்ந்து, உலகையே உலுக்கிக் கொண்டுள்ளது.
ஆனால், அதையும் தமது இனவாத நோக்கங்களை நிறைவு செய்து கொள்வதற்காகச் சில ஊடகங்கள் முயல்கின்றன. கடந்த 11 ஆம் திகதி, முதன் முதலாக இலங்கையர் ஒருவர், உள்நாட்டிலேயே கொவிட்-19 நோய் தொற்றால், பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிய வந்ததை அடுத்து, நோய் பரவுவதைத் தடுக்கும் முகமாக, சன நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ளுமாறும் மக்களைக் கூட்டமாக ஒன்று சேர வேண்டாம் என்றும் அரசாங்கம் அறிவித்தது.
இந்த அறிவிப்பைப் புறக்கணித்து, புறக்கோட்டை, சம்மாங்கொடு பள்ளிவாசலில், கடந்த 20ஆம் திகதி, கூட்டுத் தொழுகை நடைபெற்றதாகவும் அதில் நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டதாகவும், சிங்களத் தொலைக் காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது.
களுத்துறை மாவத்தில், அட்டுளுகம என்னும் முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த நபரொருவர், வியாழக்கிழமை (26) டுபாய்க்குச் சென்று திரும்பியிருந்தார். அவர், வெளிநாடுகளுக்குச் சென்று, நாடு திரும்புவோருக்காக, அரசாங்கம் அறிவித்துள்ள தனிமைப்படுத்தல் நிலையமொன்றுக்குச் செல்ல வேண்டும் என்ற விதிமுறைகளை மீறி, வீடு திரும்பியிருந்தார்.
விதிமுறைகளை மீறிய குறித்த நபருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை, பின்னர் தெரிய வந்தது. அந்நபர், தான் வாழ்ந்த கிராமத்தில் சகல வீடுகளுக்கும் சென்றுள்ளமை தெரிய வந்ததை அடுத்து, அந்தக் கிராமமே இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அன்றே, மேற்படி தொலைக் காட்சியின் நிருபர் ஒருவர், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவைப் பேட்டி கண்டார். அப்போது அவர், அட்டுளுகம சம்பவத்தையும் அதுபோன்ற மற்றொரு சம்பவத்தையும் நினைவூட்டி, அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கேட்டார். “அவர்கள் முஸ்லிம்கள்” என, கமல் குணரத்னவும் கூறினார். அத்தோடு, முஸ்லிம் குடும்பங்களில் உறுப்பினர்கள் அதிகம் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.
இலங்கை ஊடகமொன்றில், இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இனம், அடையாளப்படுத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் அதுவாகும்.
இந்தியாவுக்குச் சென்று, நாடு திரும்பிய அக்குறணையைச் சேர்ந்த மற்றொரு முஸ்லிமும், தாம் வெளிநாடு சென்று, நாடு திரும்பியதை அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் இருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை, சனிக்கிழமை (28) தெரியவந்தது. அதன் பின்னர், அக்குறணையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களை அடுத்து, குறிப்பாக, இந்தச் சம்பவங்களை விவரிக்கும் ஊடகங்கள், பாதிக்கப்பட்டவர்களின் இனத்தை அடையாளப்படுத்தியதன் பின்னர், சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, இந்தச் சம்பவங்களைப் பற்றி, ஞாயிற்றுக்கிழமையும் (29) திங்கட்கிழமையும் (30) குறிப்பிடுகையில், அவர்களின் இனத்தை அடையாளப்படுத்தினார்.
இதே காலகட்டத்தில், அதாவது கடந்த வெள்ளிக்கிழமை (27) ஹொரவபொதான, கிவுளக்கட பள்ளிவாசலிலும் கூட்டுத் தொழுகை நடைபெற்றதாகப் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதுவும், தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக, சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்வோருக்குத் தீனி போட்டதாக அமைந்தது.
முஸ்லிம்கள் தான், பொறுப்பின்றிச் செயற்படுவதன் மூலம், இலங்கையில் கொரோனா வைரஸைப் பரப்புகிறார்கள் என்பதைப் போலத்தான், இந்தப் பிரசாரங்கள் அமைந்துள்ளன.
அறிவித்தல்களை மதிக்காமை, பொறுப்பற்ற செயல்கள் என்பதில், எவ்வித விவாதமும் இல்லை. ஆனால், பொறுப்பற்றுச் செயற்படுவோர், குறிப்பிட்ட ஓரினத்தைச் சேரந்தவர்கள் மட்டும் அல்லர்.
இலங்கையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையரைப் பற்றி, மார்ச் 11ஆம் திகதி தெரியவந்ததை அடுத்து, மார்ச் முதலாம் திகதி முதல், மார்ச் 15ஆம் திகதி வரை, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள், அதைப் பற்றிப் பொலிஸாருக்கு அல்லது, சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் என, அரசாங்கம் மார்ச் 15ஆம் திகதி அறிவித்தது.
ஆனால், எத்தனை பேர் முன் வந்து, அவ்வாறு தம்மைப் பற்றிய உண்மையைக் கூறினார்கள்?
அந்த அறிவித்தலைப் புறக்கணித்தவர்கள் அனைவரும், குறிப்பிட்ட ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. மார்ச் 15 ஆம் திகதிக்குப் பின்னர், இத்தாலி, தென்கொரியா, ஈரானிலிருந்து நாடு திரும்பியோர் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போது, அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், குறிப்பிட்ட ஓரினத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.
வெளிநாடொன்றில் இருந்து வந்து, தனிமைப்படுத்தும் நிலையமொன்றுக்குச் செல்லாமல், தப்பி வந்த மஹியங்கனையைச் சேர்ந்த ஒருவரைச் சந்திக்கப் பொலிஸார் சென்ற போது, அவர், தான் தனிமைப்படுத்தும் நிலையத்துக்குப் போவதில்லை என, அடம் பிடித்தார்; அவர் ஒரு முஸ்லிம் அல்ல.
கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்து, பாடசாலைகளுக்கும் அரச அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்கியது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்துப் பலர், சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றிருந்தனர். அதேநாள்களில் றோயல்-தோமியன் கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றது.
எனவே, பொறுப்பற்றுச் செயற்படுவதாக, குறிப்பிட்ட ஓரினத்தை மட்டும் குறைகூற முடியாது. ஆனால், மற்றவர்களும் பொறுப்பற்றுச் செயற்படுகிறார்கள் என்று, தாமும் பொறுப்பற்றுச் செயற்பட, எவருக்கும் உரிமையும் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் அது, ஆபத்தானதாகவும் அமையலாம்.
சகல சமூகங்களிலும், பொறுப்புடன் செயற்படுவோரைப் போலவே, பொறுப்பற்றுச் செயற்படுவோரும் உள்ளனர்.
பொதுவாக, மக்கள் விளங்கிக் கொள்ளாத முக்கியமான விடயம் என்னவென்றால், தமது பொறுப்பற்ற செயலால், முதலாவதாகப் பாதிக்கப்படுவது தமது குடும்பத்தினர் என்பதே ஆகும்.
அட்டுளுகம கிராமத்திலிருந்து, வெளிநாடு சென்றவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது, மார்ச் மாதம் 26ஆம் திகதியன்றே தெரிய வந்தது.
கொரோனா வைரஸ், ஒருவரது உடலில் உட்புகுந்து 14 நாள்களில் நோயின் அறிகுறிகள் தெரியவருவதாகப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவேதான், தனிமைப்படுத்தல் நடவடிக்கை, 14 நாள்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது, அட்டுளுகம நோயாளிக்கு, மார்ச் 12ஆம் திகதியளவில் நோய் தொற்றியிருக்க வேண்டும்.
அவர், அன்றோ அதனை அண்டிய நாளொன்றிலோ தான், நாடு திரும்பியிருக்க வேண்டும். இது, வௌிநாட்டிலிருந்து நாடு திரும்புவோர், தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என, அரசாங்கம் அறிவித்த காலப்பகுதியாகும்.
குறித்த நபர், அதைச் செய்யாது எவ்வாறோ தப்பியிருந்திருக்கிறார்; அதை ஒரு சாமர்த்தியமாகவும் அவர், பெருமைப்பட்டிருக்கலாம். அந்தப் பொறுப்பற்ற செயலின் விளைவை, இன்று அவர் மட்டுமன்றி, முதலாவதாக அவரது குடும்பமும், இரண்டாவதாக அவரது கிராமத்தவர்களும் மூன்றாவதாக முஸ்லிம் சமூகமும் அனுபவிக்கின்றது.
இத்தோடு அது நின்றுவிடுவதில்லை. வைரஸுக்கு இன, மத, சாதி பேதமில்லை. அவர் தமது கிராமத்திலிருந்து வெளியே எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் நோய் பரவும் அபாயம் இருக்கிறது.
அவர் மற்றவர்களைப் பற்றி, அக்கறை இல்லாதவராக இருக்கலாம். ஆனால், அவர் குறைந்த பட்சம், தமது குடும்பத்தினரைப் பற்றியாவது சிந்தித்திருக்க வேண்டும். இப்போது, அவரது தந்தையையும் சகோதரியையும் நோய் தாக்கியிருக்கிறது.
இந்நிலைமைக்கு, மற்றொருவரைக் குறைகூற முடியாது. இதற்கு, அவர் மட்டுமேதான் பொறுப்புக் கூற வேண்டும். அவரது தந்தை ஒரு முதியவர்; முதியவர்களையும் பலவீனமானவர்களையும் இந்த நோய், மிக மோசமாகத் தாக்கும் எனக் கூறப்படுகிறது.
தமது பொறுப்பற்ற செயலால், அக்குறணை நபர், இப்போது தமது குடும்பத்தினரைப் பற்றி, எந்தளவு பயத்தோடு இருப்பார் என்பதை, ஊகித்துக் கொள்ளலாம்.
சம்மாங்கொடு பள்ளிவாசலில், கடந்த 20ஆம் திகதி ஜும்ஆத் தொழுகை நடைபெற்றதாக, மேற்படி தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தி தவறானது என்றும் கடந்த 13ஆம் திகதிக்குப் பின்னர், தமது பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகை நடைபெறவில்லை என்றும் அந்தப் பள்ளிவாசல் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
13ஆம் திகதி, நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் ஜும்ஆத் தொழுகை நடைபெற்றது தெரிந்ததே. இதையடுத்தே பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை நடத்த வேண்டாம் என, ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்திருந்தது. எனவே 13ஆம் திகதி நடைபெற்ற கூட்டுத் தொழுகைகளைப் பற்றி, எந்தவொரு பள்ளிவாசல் நிர்வாகியையும் குறைகூற முடியாது.
ஆயினும், அன்றும் சில பள்ளிவாசல்களில் தொழுதவர்கள் மத்தியில், கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் இருந்திருக்கலாம் என்றே இப்போது தெரிகிறது.
ஹொரவபொதான, கிவுளக்கட பள்ளிவாசலிலும் கூட்டுத் தொழுகை நடைபெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் அங்கு வரும்போது, தப்பி ஓடியவர்களின் செருப்புகளைத் தொலைக்காட்சி செய்திகளில் காணக்கூடியதாக இருந்தது.
இந்தச் சம்பவத்தைப் பற்றி, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், சமூக வலைத்தளமொன்றில் விளக்கமளித்திருந்தார். அங்கு, கூட்டுத் தொழுகை நடைபெறவில்லை என்றும், தற்செயலாக அங்கு வந்த சுமார் 20 பேர், அங்கு தனித் தனியாகத் தொழுதார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பு விடயத்தில், அவர்கள் கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டார்களா தனித்தனியாகத் தொழுதார்களா என்பது முக்கியமல்ல. சுமார் 20 பேர், அங்கு கூடியிருந்தார்கள் என்பதை, அவர் ஏற்றுக்கொள்கின்றார்.
தொற்றுப் பரவுவதற்கு 100 பேர் தேவையில்லை; இருவர் போதுமானதாகும். அதில், ஒருவர் எங்கிருந்தோ வைரஸை தொட்டுவிட்டு வந்திருக்கலாம். அவர் பள்ளிவாசலின் கதவையோ, நிலையையோ தொடலாம். அப்போது, வைரஸ் அவற்றிலும் படலாம்; அதை மற்றவர்கள் தொடலாம். இவ்வாறு கொரோனா வைரஸ் பரவலாம்.
எனவே, கூட்டுத் தொழுகை நடைபெறவில்லை; தனித் தனியாகத் தான் தொழுதார்கள் என்று கூறி, நடந்ததை நியாயப்படுத்த முடியாது.
இவர்கள், பள்ளிவாசலுக்கு வரும் வழியில், பிற மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் அல்லது, ஒரு சுகாதார அதிகாரி எங்கு போகிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் உண்மையைக் கூறுவார்களா?
அன்று பொலிஸார் வந்தபோது, அவர்கள் செருப்புகளைப் போட்டுவிட்டுத் தப்பி ஓடியதாகச் செய்திகள் கூறின. அது, உண்மையாக இருப்பின் அங்கே நேர்மையில்லை என்பது தெரிகிறது.
தற்போது நாட்டில் அமுலில் இருப்பது, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் அல்ல; மக்களை ஒருவரிடமிருந்து, ஒருவரைப் பிரித்து வைப்பதற்காக விதிக்கப்பட்ட சட்டமாகும். இவ்வாறு மக்களைப் பிரித்து வைப்பதன் மூலம், அரசாங்கம் எவ்வித இலாபத்தையும் அடையவில்லை.
சகல நாடுகளிலும், அரசாங்கங்கள் இது போன்ற சட்டங்களால், கோடிக் கணக்கில் பணத்தை இழக்கின்றன. ஆனால், பொது மக்கள் பொறுப்பற்றுச் செயற்பட்டால், அந்த நட்டத்துக்குப் புறம்பாக, ஆயிரக் கணக்கில் உயிராபத்தை எதிர்கொள்ளலாம். அந்த ஆயிரக் கணக்கில் நாமும் ஒருவராக இருக்கலாம்.
கொவிட்-19 நோய் தடுப்புக்கு, மருந்து இல்லை. அதற்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன.
ஒன்று, நோய் தாக்கியவரது உடலில், எதிர்ப்புச் சக்தி வளரும் வரை, நோயின் அறிகுறிகளைக் குறைத்து, அவரது உயிரைப் பாதுகாக்க முயல்வதாகும். இது சாத்தியமாகலாம்; தோல்வியடையலாம்.
இரண்டாவது, வைரஸ் தொற்றியவரிடமிருந்து, மற்றவர்கள் கூடிய வரை விலகியிருப்பதாகும். ஆனால், யார் இந்த வைரஸ் தொற்றியவர்? நோயின் அறிகுறிகளை வெளிக்காட்டும் வரை, அது ஒருவருக்கும் தெரியாது. எனவே, அந்த விடயத்தில் தாய், தந்தை, பிள்ளைகள், நெருங்கிய நண்பர்கள் என எவரையும் நம்ப முடியாது.
ஏனெனில், வைரஸ் தொற்றியவரும் தொற்றாதவரும் ஒரே மாதிரியாகத் தான் தென்படுவார்கள். இதில் மற்றவர்களும் பொறுப்பற்றுச் செயற்படுகிறார்கள் என்பதற்காக, நாமும் அவ்வாறு செயற்படலாம் எனக் கருதுவது ஆபத்தானதாகும்.
இது மற்றவர்களையும் பொறுப்புடன் செயற்படத் தூண்டுவதோடு, நாமும் பொறுப்புடன் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள ஓர் ஆபத்தான நிலைமையாகும்.
இந்த விடயத்தில், நேர்மை என்பது மிகவும் முக்கியமாகும். எந்த இனத்தைச் சேர்ந்தாலும் மனிதர்களில் மிகச் சிலரே நேர்மையானவர்கள்; பெரும்பாலானவர்கள் பிறருக்குத் தாம் நேர்மையானவர் எனக் காட்டுவதிலேயே அக்கறையாக இருக்கிறார்கள்.
ஆயினும், இந்தக் கொரோனா வைரஸ் தடுப்பு விடயத்தில், பிறருக்கு நேர்மையைக் காட்டுவதை விட, தமது மனச்சாட்சிக்கு நேர்மையாக நடந்து கொள்ள ஒவ்வொருவரும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
அவ்வாறிருந்தும், மனிதர்கள் நேர்மையாக நடந்து கொள்வதில்லை. எனவே தான், உலகம் முழுவதிலும் அரசாங்கங்கள், கூடிய வரை மக்களைத் தனிமைப்படுத்த, ஊரடங்குச் சட்டம் என்றும் ‘முடக்கம்’ என்றும் பல பொறிமுறைகள் கையாளப்படுகின்றன.
tamilmirror