கொரோனா வைரஸ்: இலங்கை – உடல்களை தகனம் செய்ய இஸ்லாமியர்கள் எதிர்ப்பு, அறிவிப்பை வெளியிட்ட அரசு

இலங்கையில் உயிரிழக்கும் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களை தகனம் செய்யும் வகையில் அரசாங்கத்தினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் (11) வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கான அதிகாரங்களின் பிரகாரமே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, எவரேனும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பதற்கு நேரிட்டால், அவரது பூதவுடலை முறையான அதிகாரிகளால் பெயர் குறித்து நியமிக்கப்படும் தகனத்திற்கான அத்தியாவசிய கடமைகளை பெறுபேற்கும் நபர் தவிர்ந்த வேறு எவரிடமும் கையளித்தல் ஆகாது என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தகைய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் முறையாக அங்கீகரிக்கப்படும் சுடலை அல்லது இடமொன்றில் பூதவுடன் தகனம் செய்யப்பட வேண்டும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் சாத்தியமான உயிரியல் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கத்திற்கென முழுமையாக எரிவதற்கென ஆகக் குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை 800க்கும், 1200ற்கும் இடைப்பட்ட பாகை செல்சியஸ் வெப்ப நிலையில் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூதவுடலை தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் அந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்தும் அனைத்து ஆடைகளும் மீள பயன்படுத்தப்படாத வண்ணம், பூதவுடலுடன் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூதவுடன் சாம்பலானதும், உறவினர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க அவரது சாம்பல் உறவினர்களிடம் கையளிக்க முடியும் என வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் எதிர்ப்பிற்கு மத்தியில் வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

203 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன், அவர்களில் 56 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், 140 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 154 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்த 7 பேரின் சடலங்களும் தகனம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களில் முஸ்லிம்களும் அடங்குகின்ற நிலையில், முஸ்லிம்கள் தமது மத சம்பிரதாயங்களுக்கு அமைய தகனம் செய்வது கூடாது என அரசாங்கத்தை வலியுறுத்தி வந்திருந்தனர்.

முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், இஸ்லாமிய மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், தகனம் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் மாற்றப்படவில்லை.

கொரோனா தொற்று ஏற்பட்டு மரணமடையும் ஒருவரின் சடலத்தை தகனம் செய்வதே சிறந்தது என்ற நிலைப்பாட்டில் சுகாதார பிரிவினர் இருந்ததை அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியிருந்தனர்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாகளை தகனம் செய்யக்கூடாது என வலியுறுத்தி வந்த நிலையிலேயே சுகாதார அமைச்சு இந்த விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், இனிவரும் காலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BBC