இலங்கையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் சிறுவர் துன்புறுத்தல்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரன அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள பின்னணியில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் தொடர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 20ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும், கொரோனா அச்சுறுத்தல் மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் அதிகரித்திருந்தது.
இந்த நிலையில், மார்ச் மாதம் 12ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வரை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு விடுமுறை அறிவித்திருந்தது.
கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்கும் சாத்தியம் எழுந்த நிலையிலேயே, கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எட்டியிருந்தது.
அரச மற்றும் தனியார் துறையினருக்கும் அரசாங்கம் விடுமுறை அறிவிப்பை விடுத்த நிலையில், விடுகளிலிருந்து அனைவரையும் கடமையாற்றுமாறு அரசாங்கம் அறிவித்தது.
இதன்படி, நாளாந்தம் பெற்றோர்களுடன் பெரும்பாலான சிறார்கள் வாழ முடியாத இந்த காலக்கட்டத்தில், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலம் முதல் சிறார்கள் பெற்றோருடன் வாழ்ந்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான பின்னணியில், சிறுவர்கள் ஊரடங்கு சட்டம் மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கொரோனா அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு முன்னர் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாளாந்தம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சுமார் 40 முறைப்பாடுகள் கிடைக்கும் என கலாநிதி முதித்த விதானபத்திரன குறிப்பிட்டார்.
இவ்வாறு பாதிவான முறைப்பாடுகளில் 10 வீதமானவை சிறுவர் துன்புறுத்தல்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலப் பகுதியில் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் குறித்து பதிவான முறைப்பாடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ள போதிலும், சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக நடைமுறையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
இந்த காலப் பகுதியில் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் அல்லது வன்முறைகள் தற்போது 42 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் இந்த மாதம் 9ஆம் தேதி வரையான காலம் வரை 307 முறைபாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வசம் பதிவாகியுள்ளதாக கலாநிதி முதித்த விதானபத்திரன குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு பதிவான முறைப்பாடுகளில் 127 முறைப்பாடுகள் சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பிலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறுவர் துன்புறுத்தல்கள் மற்றும் வீட்டிற்குள்ளான வன்முறைகள் குறித்தே தற்போதைய ஊரடங்கு காலத்தில் அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் கவலை வெளியிடுகின்றார்.
வீட்டிற்குள் முடங்கியுள்ள பெற்றோர், உறவினர்கள், நண்பர்களினாலேயே சிறுவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வீட்டில் காணப்படுகின்ற பொருளாதார பிரச்சினைகள், குடும்ப பிரச்சினைகள், போதைப்பொருள் உள்ளிட்ட பிரச்சினைகளே இதற்கான காரணமாக அமையும் என அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சிறுவர்கள் தொடர்பில் பதிவான முறைப்பாடுகளில் பெருமளவானவை வீட்டிற்கு வெளியில் இடம்பெற்ற போதிலும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலத்தில் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் வீட்டிற்குள்ளேயே இடம்பெற்று வருகின்றது என அவர் கவலை வெளியிடுகின்றார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நான்கு விதங்கள்.
01.கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்கள்
இலங்கையில் 198 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 21 சிறுவர்கள் உள்ளடங்குவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரன தெரிவிக்கின்றார்.
சிறுவர்களுக்கு வேறு ஏதாவது நோய் ஏற்படும் பட்சத்தில், சிறுவர்களுக்கு பக்கத்தில் அவரது பெற்றோர் அல்லது உறவினர்கள் இருப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், கொரோனா தொற்றுக்குள்ளான இந்த 21 சிறுவர்களும் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிறுவர்களின் மனங்களில் தற்போது அச்ச நிலைமை ஏற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
குறித்த சிறுவர்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள இந்த அச்ச நிலைமையை போக்குவதற்கு, மருத்துவமனை நி;ர்வாகம் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
02.தனிமைப்படுத்தல் நிலையங்களிலுள்ள சிறுவர்கள்
தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் 10 வீதமானோர் சிறுவர்கள் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரன குறிப்பிட்டார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிறுவர்களின் மனநிலைமை வழமைக்கு கொண்டு வருவதற்காக பாதுகாப்பு பிரிவினர் மற்றும் சுகாதார பிரிவினர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
03.சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலுள்ள சிறுவர்கள்
இலங்கையிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் இன்றைய தரவுகளின் பிரகாரம் 11,132 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கலாநிதி முதித்த விதானபத்திரன தெரிவிக்கின்றார்.
இவ்வாறு சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலுள்ள சிறுவர்களை பார்வையிடுவதற்காக ஏனைய நாட்களில் பலர் சென்று வரும் பின்னணியில், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் வெளிநபர்கள் அங்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அந்த சிறுவர்களும் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை உணர முடிகின்றது என அவர் கூறினார்.
இந்த சிறுவர்களின் மனநிலைமையை மாற்றுவதற்கு பாரமரிப்பு திணைக்களத்தினால் பாரிய வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
04.வீடுகளிலுள்ள சிறுவர்கள்
இலங்கையில் வீடுகளில் மாத்திரம் 45 லட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரன தெரிவிக்கின்றார்.
அவ்வாறு வீடுகளிலுள்ள சிறுவர்களுக்கும் சில சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
சில சிறுவர்களின் பெற்றோர் வெளிநாடுகளில் முடங்கியுள்ளதாகவும், சில சிறுவர்களின் பெற்றோர் வெளி பிரதேசங்களில் முடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி, சில பெற்றோர் கொரோனா காரணமாக மருத்துவமனைகளிலோ அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களிலோ தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், வீடுகளிலுள்ள குறித்த சிறுவர்களுக்கும் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் அத்தியாவசியமாகியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், இடைவெளியுடனான தேசிய மனோநிலை வேலைத்திட்டமொன்றை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் கலாநிதி முதித்த விதானபத்திரன தெரிவிக்கின்றார்.
BBC