கோவிட்-19: கோத்தா கினாபாலு சமீபத்திய சிவப்பு மண்டல பகுதியாக வகைப்படுத்தப்பட்டது

சபாவின் கோத்தா கினாபாலு மாவட்டம், 28வது கோவிட்-19 சிவப்பு மண்டல பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, கோத்தா கினாபாலுவில் 42 நேர்மறையான கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

சபாவில் உள்ள 42 கோவிட்-19 நோயாளிகளில் இருவர் இறந்துவிட்டதாகவும், 18 பேர் குணமடைந்துள்ளதாகவும் சபா சுகாதார மற்றும் ஆரோக்கிய அமைச்சர் பிரான்கி பூன் தெரிவித்தார்.

தவாவ் 79 பாதிப்புகளையும் ஒரு இறப்பையும் பதிவு செய்துள்ளது. இங்கு 21 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் லாஹாட் டாத்து 39 நேர்மறை பாதிப்புகளுடன் சிவப்பு மண்டலத்தை நெருங்குகிறது. இங்கு 28 பேர் குணமடைந்துள்ளனர்.

மொத்தத்தில் சபாவில் 288 கோவிட்-19 பாதிப்புகளும், 135 குணமடைந்தவர்களும், நான்கு இறப்புகளும் பதிவாகியுள்ளன.

நாட்டில், கோவிட்-19 பாதிப்புகள் அதிகம் உள்ள மூன்று சிவப்பு மண்டல பகுதிகள் லெம்பா பந்தாய் (592), ஹுலு லங்காட் (446) மற்றும் பெட்டாலிங் (366).

மலேசியாவில் இதுவரை 5,182 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இதில் 2,766 (53.4 சதவீதம்) குணமடந்துள்ளன, 84 (1.6 சதவீதம்) இறப்புகள் உள்ளன.

இதுவரை, அதிக சிவப்பு மண்டலங்களைக் கொண்ட மாநிலம் ஆறு பகுதிகளைக் கொண்ட சிலாங்கூர் ஆகும் (பெட்டாலிங், ஹுலு லங்காட், கோம்பக், கிள்ளான், செப்பாங் மற்றும் ஹுலு சிலாங்கூர்); கோலாலம்பூர் (செராஸ், கெப்போங், லெம்பா பந்தாய் மற்றும் தீத்திவாங்சா) மற்றும் ஜொகூர் (பத்து பஹாட், ஜொகூர் பாரு, குளுவாங் மற்றும் முவார்).

மற்ற மாநிலங்கள் மலாக்கா (ஜாசின் மற்றும் மத்திய மலாக்கா); நெகிரி செம்பிலான் (ரெம்பாவ் மற்றும் சிரம்பன்); பேராக் (ஹீலீர் பேராக் மற்றும் கிந்தா); கிளந்தான் (பகோத்தா பாரு); பகாங் (ஜெரண்டுட் மற்றும் குவாந்தான்); சபா (தவாவ் மற்றும் கோட்டா கினபாலு); மற்றும் சரவாக் (கூச்சிங் மற்றும் கோத்தா சமரஹான்).